தெலங்கானா சுரங்க விபத்து: விஞ்ஞானிகள் பரிந்துரைத்த இடங்களில் மீட்புப் பணி!
`விஜய்க்கு நாங்கள் கூட்டணி அழைப்பு விடுக்கவில்லை..!' - செல்லூர் ராஜூ
"விஜய்க்கு நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை, எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்க விரும்புவோர் எங்கள் கூட்டணிக்கு வரலாம்" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசும்போது, "தங்கள் கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி என்று முதல்வர் ஏன் சொல்ல வேண்டும்? அவர்தான் அனைத்தையும் நிறைவேற்றி விட்டாரே? தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடுகிறது, சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகாமல் இருக்கின்றனர், சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது, நீட் தேர்வை ரத்து செய்துவிட்டார். தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் 90 சதவிகிதத்தையும் நிறைவேற்றி விட்டவர், பிறகு எதற்கு கூட்டணி, கூட்டணி என்று சொல்கிறார்? கொள்கை கூட்டணி என்று அவர் தான் கூறுகிறாரே தவிர அவருடன் இருப்பவர்கள் யாரும் கூவவில்லை. இதிலிருந்தே ஏதோ வீக்னஸ் இருப்பது தெரிகிறது. இவ்வளவு செய்தவர் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்து பார்க்கலாமே? கடந்த ஆட்சியை விட நாங்கள் சிறப்பாக செயல்பட்டிருக்கிறோம் என்று கூறலாமே? மக்கள் கொந்தளித்து போயிருக்கிறார்கள்.
கூட்டணியில் இருந்தாலும் கட்சி கொடியேற்ற முடியவில்லை என்று திருமாவளவன் கூறியுள்ளதையே முதல்வருக்கு டெடிகேட் பண்ணுகிறேன். கொள்கைக் கூட்டணி என்று முதல்வர் சொன்னாலும் திருமாவளவன் கூறியுள்ளதன் மூலம் கூட்டணி எப்படி உள்ளது என்பது தெரிகிறது. வேங்கைவயல் விவகாரத்தில் தீர்வு காணவில்லை. திமுக எம்.எல்.ஏ வீட்டில் பட்டியலின சிறுமி தாக்குதலுக்கு ஆளாகப்பட்டு இதுவரை அதற்கு தீர்வு காணப்படவில்லை. கள்ளச்சாராயத்தால் அதிகமாக மரணமடைந்தது பட்டியலின மக்கள்தான். கூட்டணியில் இருந்து திருமாவளவன் நொந்து நூடுல்சாகிவிட்டார். எப்படி இருந்த திருமாவளவன் இப்படி ஆகிட்டார் என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு ஆகிவிட்டது.
சிபிஎம் கட்சி செயலாளரோ, இந்த ஆட்சி அமைவதற்கு காரணமாக இருந்த அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்கிறார். இந்த அரசை தூக்கிப்பிடித்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்றைக்கு திமுக அரசை எதிர்க்கிறார்கள். ஆனால், எதையாவது செய்து மீண்டும் ஆட்சிக்கு வர முதலமைச்சர் நினைக்கிறார்.

தனித்து போட்டியிடப்போவதாக விஜய் தரப்பில் அவர்களின் கருத்தை கூறியுள்ளார்கள். நாங்கள் ஆரம்பத்திலிருந்து சொல்வது, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர், அதிமுக ஆட்சி அமைப்பதற்கு யார் கூட்டணிக்கு வருகிறார்களோ அவர்களை இணைத்துக் கொண்டுதான் களத்திற்கு போகப்போகிறோம். விஜய்க்கு நாங்கள் கூட்டணி அழைப்பு விடுக்கவில்லை. நாங்கள் அழைத்தோம் என்று பிரசாந்த் கிஷோருக்கு எப்படி தெரியும்? எங்கள் தலைவர்கள் யாராவது பேசினார்களா? அதுகுறித்து நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்.
தாய்மார்களை மதிக்கக் கூடிய கட்சி அதிமுக. பெண்ணுக்கு ஒரு இன்னல் என்றால் எங்கிருந்து எந்த தொல்லை வந்தாலும் அதிமுக-வினர் பெண்களுக்கு ஆதரவாக உடன் இருப்பார்கள். தமிழ்நாட்டில் நடக்கிற அனைத்து வன்முறை சம்பவங்களிலும் திமுக-வினர் சம்பந்தப்பட்டுள்ளார்கள். கலெக்டர், எஸ்.பி அனைவரும் என் பேச்சைக் கேட்க வேண்டும் என்று புதிதாக பொறுப்புக்கு வந்த மாவட்டச் செயலாளர் கூறியதற்கு ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவில்லை. சீமான் பெண்களை வைத்துக் கொண்டே ஒரு பெண்ணை பற்றி இழிவாக பேசுகிறார். அவர் பேச்சு முகம் சுளிக்க வைக்கிறது. முதலில் பொது இடங்களில் பெண்களை மரியாதையாக பேசவேண்டும்

மதுரை மேற்கு தொகுதி அதிமுகவின் கோட்டை, இங்கே யார் வந்து என்ன செய்தாலும் எந்த பருப்பும் வேகாது. சாதாரண தொண்டரை நிறுத்தினாலும் அதிமுக வெற்றி பெறும். அமைச்சர் மூர்த்தி, முதலில் மதுரைக்கு சிறப்பு நிதியை பெற்று திட்டங்களை கொண்டு வரட்டும்" என்றார்.