ரோஹித் சர்மா உடல் எடையைக் குறைக்க வேண்டும்: காங்கிரஸ் தலைவர் கருத்து!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உடல் எடை அதிகமாக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் விளையாடி வருகிறது. நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்றப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 17 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானைச் சேர்ந்த செய்தியாளர் ரோஹித் சர்மா சிறந்த ஆட்டக்காரர் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாகப் பதிவிட்ட காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது, “ரோஹித் உடல் பருமனான விளையாட்டு வீரர். அவர் எடையைக் குறைக்க வேண்டும். அதேபோல, இந்திய கேப்டன்களில் தகுதியில்லாத கேப்டன் இவர்தான்” என்று பதிவிட்டிருந்தார்.
அவர் ஒரு சாதாரண வீரர். சாதாரண கேப்டன். அதிர்ஷ்டத்தால் இந்திய அணியின் கேப்டனாகி விட்டார்” என விமர்சித்தார்.
அவரது கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே மட்டுமின்றி பாஜகவினரிடமும் கடுமையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பதிவை ஷாமா நீக்கிவிட்டார்.
இதையும் படிக்க | 2025 ஆஸ்கர் விருதுகள்... முழு பட்டியல் விவரம்!
அவரது இந்தக் கருத்துக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பந்தாரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ”இதற்கு காங்கிரஸ் வெட்கப்பட வேண்டும். இப்போது அவர்கள் இந்திய கிரிக்கெட் கேப்டனைப் பற்றி அவதூறு பேசுகிறார்கள். இந்திய அரசியலில் தோல்வியடைந்த ராகுல் காந்தி இப்போது கிரிக்கெட் விளையாட வருவார் என அவர்கள் எதிர்பார்க்கிறார்களா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பாஜகவினர் பலரும் இதுகுறித்து சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஷாமா விளக்கமளித்துள்ளார். அதில், “அது ஒரு விளையாட்டு வீரரின் உடற்தகுதி குறித்த பொதுவான ட்வீட். உடலைக் கேலி செய்யவில்லை. ஒரு விளையாட்டு வீரர் முழு உடற்தகுதியுடன் இருக்கவேண்டும் என நான் நினைக்கிறேன். எனவே அதுபற்றி ட்வீட் செய்தேன். எனக்கு அதற்கான உரிமை உள்ளது. அதில் என்ன தப்பு? அதுதான் ஜனநாயகம்” என்று தெரிவித்தார்.