இல்லத்தரசிகளுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஏப்ரல் வரைதான் இருக்குமாம்!
கடந்த டிசம்பர் மாதம் முதல் காய்கறிகளின் விலை சதத்தைத் தொட்டுவிடுவோம் என்று மிரட்டிக்கொண்டிருந்த நிலையில், தற்போது வெங்காயம், தக்காளி என அனைத்துக் காய்கறிகளின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது.
பிப்ரவரி வரை, காய்கறிகளின் விலை உயர்வால், மாத பட்ஜெட்டில் பெரிய துண்டு விழுந்திருந்த நிலையில், மார்ச் மாதத்தில், விலை குறைந்து பணத்தை மிச்சப்படுத்த வழிவகை ஏற்பட்டுள்ளது.
கோயம்பேடு காய்கறி சந்தையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.50க்கு விற்பனையான காய்கறிகளின் விலை தற்போது கிலோ ரூ.15-20 க்கு விற்பனையாகி வருகிறது. இதனால், ஒருபக்கம் விவசாயிகளும் வியாபாரிகளும் வேதனைப்பட்டாலும், காய்கறிகளை வாங்கும் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதற்குக் காரணமாகக் கூறப்படுவது என்னவென்றால், கோயம்பேடு சந்தைக்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாள் ஒன்றுக்கு தற்போது 800 முதல் 900 லாரிகளில் காய்கறிகள் வந்து கொண்டிருக்கின்றன. வரத்து அதிகரித்திருப்பதால் காய்கறிகளின் விலைகள் குறைந்துள்ளது.
ஆனால், மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடந்த டிசம்பரில் 600 லாரிகள் மட்டும்தான் வந்தது. அதனால், காய்கறிகளின் விலை அதிகமாக இருந்தது.
அப்போது ஒரு கிலோ காய்கறி விலை ரூ.40 வரை இருந்தது. இது சில்லறை விற்பனைக்கு வரும்போது இரண்டு மடங்கு வரை விற்பனையாகி வந்த நிலையில், கோயம்பேட்டில் தற்போது ரூ.15 - 20க்கு காய்கறிகள் விற்பனையாவதால், சில்லறை விற்பனையிலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய விலை நிலரப்படி, தக்காளி ஒரு கிலோ ரூ.15க்கும், முருங்கை ஒரு கிலோ ரூ.40க்கும் விற்பனையாகி வருகிறது.
முள்ளங்கி, கோஸ் போன்றவை தலா கிலோ ரூ. 8க்கும், பீட்ரூட், கத்தரிக்காய், அரைக்காய் போன்ற காய்கறிகள் கிலோ ரூ.10க்கும் விற்பனையாகி வருவதாகக் கூறப்படுகிறது.
பெரிய வெங்காயம் விலை கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.20 வரை விலை குறைந்திருந்தாலும், சில்லறை விற்பனை கடைகளில் விலையைக் குறைக்க மனமில்லாமல், வியாபாரிகள் ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்து வருகிறார்கள்.
ஆனால், இந்த நிலை மார்ச் மற்றும் ஏப்ரல் வரை மட்டுமே நீடிக்கும் என்றும், கோடை வெப்பம் காரணமாக மீண்டும் விலை உயரும் என்றும் காய்கறி வியாபாரிகள் கூறியுள்ளனர். எனவே, இதனை இல்லத்தரசிகள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.