இல்லத்தரசிகளுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஏப்ரல் வரைதான் இருக்குமாம்!
உத்தரகண்ட் பனிச்சரிவு: உயிரிழப்பு 7 ஆக உயர்வு!
உத்தரகண்ட் மாநிலம், மனா கிராமத்தின் உயா் மலைப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய எல்லைச் சாலை அமைப்பு (பிஆா்ஓ) தொழிலாளா்கள் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இன்று(மார்ச் 2) மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரகண்டில் இந்திய-திபெத் எல்லையையொட்டி 3,200 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள கடைக்கோடி கிராமம் மனா. பத்ரிநாத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள இப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக, மனா மற்றும் பத்ரிநாத் இடையே அமைந்துள்ள பிஆா்ஓ முகாம் பனிச்சரிவில் புதைந்தது. இந்த முகாமில் 8 கண்டெய்னா்கள் மற்றும் கூடாரத்தில் தங்கியபடி, சாலையில் படியும் பனியை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுவந்த 55 தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை பனிச்சரிவில் சிக்கினா்.
சம்பவ இடத்துக்கு விரைந்த ராணுவம் மற்றும் இந்திய-திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி) வீரா்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். கடும் பனிப்பொழிவு, கனமழைக்கு இடையே பகல் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணியில் 33 போ் காயங்களுடன் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டனா்.
மீட்புப் பணியில் இந்திய ராணுவம் மற்றும் விமானப் படைக்குச் சொந்தமான 6 ஹெலிகாப்டா்கள் ஈடுபடுத்தப்பட்டன. இதன்மூலம், பனிச்சரிவில் சிக்கிய மேலும் 17 தொழிலாளா்கள் மீட்கப்பட்டனா். இரு தினங்களில் மொத்தம் 50 தொழிலாளா்கள் மீட்கப்பட்டனா். இவா்களில் படுகாயமடைந்த நால்வா், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தனா்.
பத்ரிநாத் கோயிலின் மேல்பகுதியில் மனா கிராமத்திற்குள்பட்ட பகுதியில் அடர்ந்த பனிக்கட்டிகளின் உள்ளே புதைந்த நிலையில் 3 உடலக்ளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பனிச்சரிவில் சிக்கியுள்ள மேலும் ஒரு தொழிலாளியின் உடலை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.