சிதம்பரம்: பிரபல கொள்ளையன் கைது
சிதம்பரம் அண்ணாமலைநகரில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் பிரபல கொள்ளையனை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள விபீஷணபுரம் கோவிந்தசாமி நகரில் வசிக்கின்ற பட்டுசாமி மனைவி சுலபா என்பவர் வீட்டை பூட்டிவிட்டு மகா சிவராத்திரி நிகழ்ச்சிக்காக கடந்த பிப்.26-ம் தேதி இரவு நடராஜர் கோயிலுக்கு சென்று விட்டு மறு நாள் காலை வீட்டிற்கு வந்து பார்த்திருக்கிறார்.
பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது 6 சவரன் தங்கச்சங்கிலி திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் அண்ணாமலைநகர் காவல் நிலைய ஆய்வாளர் கே.அம்பேத்கர், உதவி ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உத்தரவின் பேரில், சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர் டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் கே.அம்பேத்கர் மற்றும் காவலர்கள் மணிகண்டன், ராஜீவ் காந்தி, ரமணி, தமிழ்ச்செல்வன்,ஞானப்பிரகாசம் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு அண்ணாமலைநகரில் உள்ள சிசிடிவி கேமராக்களை தொடர்ச்சியாக கண்காணித்து விசாரணை மேற்கொண்டனர்.
கொச்சியில் பிரபல சிறுநீரக மருத்துவ நிபுணர் மர்ம மரணம்!
இதனையடுத்து விசாரணையில் 20 கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் சரித்திர பதிவேட்டில் உள்ள தில்லைகாளி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த, கணேசன் மகன் ராஜேஷ் (40) என்பது தெரியவந்து அவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.
மேலும் போலீஸார் அவரிடமிருந்து மதிப்பு ரூ ,3,60,000 மதிப்புள்ள, 6 சவரன் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்து அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.