தொலை நோக்குச் சிந்தனையுடன் கூடிய பட்ஜெட் - அண்ணாமலை
தொலை நோக்குச் சிந்தனையுடன் கூடிய மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், அனைத்துத் தரப்பு மக்களுக்குமான, தொலை நோக்குச் சிந்தனையுடன் கூடிய பட்ஜெட் இன்றைய தினம், நமது பிரதமர் மோடி வழிகாட்டுதலின்படி, 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, நமது மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ளார்.
"வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி” என்ற அற்புதமான திருக்குறளை மேற்கோள் காட்டி, நமது நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட், ஏழை எளிய மக்கள், விவசாயிகள், நடுத்தர மக்கள், தொழில்துறையினர், இளைஞர்கள், தாய்மார்கள், மாணவர்கள் என, அனைத்துத் தரப்பினருக்குமான மிக அற்புதமான, பொதுமக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது.
ஐஐடி-க்களில் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள் விரிவுபடுத்தப்படும்
ஆண்டுக்கு, ரூ. 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு, வருமான வரி கிடையாது என்ற நமது நிதியமைச்சரின் அறிவிப்பு, நடுத்தர வர்க்கத்தினருக்கு, ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது. இத்துடன், ரூ. 75,000 நிலையான வரி விலக்குடன் சேர்த்து, இனி ஆண்டுக்கு ரூ.12.75 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தொழிலாளர்கள், வருமான வரி கட்டத் தேவையில்லை.
இதன் மூலம், நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பு மற்றும் முதலீடு அதிகரிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.