Divorce Temple: திருமண உறவை முறித்து கொள்ள தம்பதிகள் செல்லும் `விவாகரத்து கோயில்'- எங்கே இருக்கிறது?
கோயிலுக்குச் சென்றால் திருமணம் நடக்கும் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கு ஒரு கோயிலுக்குச் சென்றால் விவாகரத்து நடக்குமாம். ஜப்பானில் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்கு "விவாகரத்து கோயில்" என்று பெயர் வந்ததற்கான காரணம் குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம்.
ஜப்பான் பல தனித்துவமான விஷயங்களுக்குப் பெயர்பெற்றது. அந்த வரிசையில் ஜப்பானில் இருக்கும் 600 ஆண்டுகளுக்கும் பழைமையான இசுமோ தைஷா கோயில்/ரெய்கன்-ஜி கோயில், `விவாகரத்து கோயில்' என்று அழைக்கப்படுவது, பலரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறது.
இந்தக் கோயில் திருமணம் மற்றும் உறவுகளுக்கு மிகவும் பிரபலமானது. அதிகம் அறியப்படாத இந்தக் கோயிலானது பிரச்னையான திருமண உறவுகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு தீர்வாக இருக்கிறது என்று நம்பப்படுகிறது.
ரெய்கன்-ஜி கோயில் ஜப்பானின் கன்சாய் பகுதியில் கட்டப்பட்டுள்ளது. கடந்தகால உறவுகளை முறித்துக் கொள்ள விரும்பும் மக்களுக்கு இந்தக் கோயில் ஒரு முக்கிய மையமாக மாறியுள்ளது. ஜப்பானிய கலாசாரம் பொதுவாக, திருமணத்தின் நல்லிணக்கத்தை ஊக்குவித்தாலும்... உறவுகளிலிருந்து வெளியேற விரும்புபவர்களுக்கு இந்தக் கோயில் வழக்கத்திற்கு மாறான இடமாக உள்ளது.
இந்தக் கோயில், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உள்ளூர் சமூகத்தைச் `மோசமான திருமண உறவு'களிலிருந்து பாதுகாக்க கட்டப்பட்டது என்று ஆதாரங்கள் கூறுகின்றன. ஆரோக்கியமற்ற திருமணங்கள் மற்றும் உறவுகளிலிருந்து விடுபட மக்கள் வரக்கூடிய ஓர் இடமாக இந்தக் கோயில் படிப்படியாக மாறியுள்ளது.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, இந்தக் கோயில் நீண்ட காலமாக பாதுகாப்பு வழங்கி வருகிறது. பெண்களுக்கு சட்டபூர்வ உரிமைகள் இல்லாத மற்றும் விவாகரத்து அங்கீகரிக்கப்படாத காலத்தில் இந்த வரலாற்று கோயில், திருமண உறவுகளிலிருந்து வெளியேற விரும்புவோருக்கு பாதுகாப்பை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கோயிலின் முக்கிய சடங்குகளில் ஒன்று நூலை வெட்டுவதாகும். அதாவது கோயிலுக்கு வரும் தம்பதிகள் அல்லது தனி நபர்கள், பெரும்பாலும் ஒரு மரத்தில் அல்லது பலிபீடத்தில் சிவப்பு நூலை கட்டும் ஒரு திருவிழாவில் பங்கேற்கிறார்கள். தங்களின் தெளிவுக்காக பிரார்த்தனை செய்த பிறகு அவர்கள் தங்களது உணர்ச்சிப்பூர்வமான உறவுகளை முறிக்கும் வகையில் அந்த நூலை வெட்டுகிறார்கள்.
விவாகரத்துக்கு மட்டுமன்றி, ஆன்மிக வழிகாட்டுதலுக்கும் இந்தக் கோயில் ஒரு சிறந்த இடமாகத் திகழ்கிறது. மகிழ்ச்சியற்ற திருமணத்திலிருந்து வெளியேற வழிகளைத் தேடியும், எதிர்கால உறவுகளின் சிக்கலை தடுக்கவும் மக்கள் இங்கு வருகை தருகின்றனர். விவாகரத்து என்பது ஓர் உணர்ச்சிகரமான அல்லது கடினமான செயலாக இருக்கலாம். ஆனால், இந்தக் கோயிலுக்கு வந்து இவ்வாறு செய்து ஆரோக்கியமற்ற உறவுகளில் இருந்து வெளியேறி தனிப்பட்ட வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.