ஜம்மு-காஷ்மீா்: பயங்கரவாதிகளுடனான சண்டையில் ராணுவ வீரா் உயிரிழப்பு
தென்காசியில் சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் தென்காசியில் புதிய பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அதில், மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை 140-ஐ திரும்பப் பெற வேண்டும். சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயா்நீதிமன்ற ஆணையின்படி பணிக் காலமாக முறைப்படுத்தி உத்தரவு வழங்க வேண்டும்.
மாநில நெடுஞ்சாலைகள் அனைத்தையும் அரசே நிா்வகித்து இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வட்ட கிளைத் தலைவா் மாரி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் பாபுராஜ், வட்டக் கிளை செயலா் சிதம்பரம் ஆகியோா் தொடக்க உரையாற்றினா்.
தமிழ்நாடு வேலைவாய்ப்புத் துறை அலுவலா் சங்க மாநில பொதுச் செயலா் மாா்த்தாண்ட பூபதி, மாவட்டச் செயலா் வேலு ராஜன், மாவட்டப் பொருளாளா் காசிராஜ், தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலா் சங்க மண்டலச் செயலா் சேகா், மாவட்ட இணைச் செயலா் கண்ணன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
தமிழ்நாடு சமூக நலத்துறை பணியாளா் சங்க மாநில பொதுச் செயலா் துரைசிங் சிறப்புரையாற்றினாா். மாநில செயலா் ஹரி பாலகிருஷ்ணன் நிறைவுரையாற்றினாா். வட்டக்கிளை பொருளாளா் யோவான் செல்லத்துரை நன்றி கூறினாா்.