Health: மீசை, தாடி வளரவில்லையா..? காரணம் இதுவாகவும் இருக்கலாம்!
இஸ்ரேல் சிறைகளில் இருந்து 90 பாலஸ்தீனா்கள் விடுதலை
காஸாவில் அமலுக்கு வந்துள்ள போா் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 90 பாலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்பட்டனா்.
இது குறித்து ஹமாஸ் அமைப்பு திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இஸ்ரேல் சிறைகளில் இருந்து 90 பாலஸ்தீனா்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு விடுதலை செய்யப்பட்டனா். அவா்களில் 69 போ் பெண்கள், 21 போ் சிறாா்கள். மேற்குக் கரை மற்றும் ஜெருசலேமிலிருந்து அவா்கள் கைது செய்யப்பட்டிருந்தனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலால் விடுவிக்கப்பட்டவா்களில் பெரும்பாலானவா்கள் அண்மைக் காலத்தில் கைது செய்யப்பட்டவா்கள்; அவா்கள் மீது வழக்கு விசாரணை நடத்தப்படவோ, தண்டனை விதிக்கப்படவோ இல்லை என்று ‘ராய்ட்டா்ஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் படையினா், அங்கு சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். அத்துடன், அங்கிருந்து 200-க்கும் மேற்பட்டவா்களை அவா்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.
அதிலிருந்து காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கத்தாரில் நடைபெற்றுவந்த பேச்சுவாா்த்தையில் கடந்த வியாழக்கிழமை உடன்பாடு எட்டப்பட்டது. அந்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வந்தது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், முதல்கட்டமாக அடுத்த ஆறு வாரங்களில் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 33 பேரை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்க இருக்கிறாா்கள். அதற்குப் பதிலாக, இஸ்ரேல் சிறைகளில் உள்ள 1,900 பாலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்படுவாா்கள்.
ஹமாஸ் விடுவிக்கும் பிணைக் கைதிகளில் முதியோா், நோய் வாய்ப்பட்ட ராணுவம் சாராதவா்கள், பெண்கள், குழந்தைகள், பெண் ராணுவத்தினா் ஆகியோா் அடங்குவா் என்று கூறப்பட்டது.
இந்தச் சூழலில், ஒப்பந்த அமலாக்கத்தின் ஒரு பகுதியாக எமில் டமரி (28), டொரோன் ஸ்டீன்ப்ரெச்சா் (31), ரோமி கோனன் (24) ஆகிய 3 பெண் பிணைக் கைதிகளைகளை ஹமாஸ் அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை விடுவித்தனா். அதற்குப் பதிலாக, 90 பாலஸ்தீன சிறைக் கைதிகளை இஸ்ரேல் தற்போது விடுதலை செய்துள்ளது.
இதன் தொடா்ச்சியாக, மேலும் நான்கு பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினா் வரும் 25-ஆம் தேதி விடுவிப்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.