கரூர்: 'சிகரெட் கேட்டா, பீடி தருவியா?' - மளிகை கடைக்குள் மண்ணெண்ணெய் குண்டு வீசி...
அமெரிக்கா்களின் நலனுக்காக வெளிநாடுகள் மீது கூடுதல் வரி: பதவியேற்புரையில் அதிபா் டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்கா்களின் நலனுக்காக வெளிநாடுகள் மீது மேலும் கூடுதல் வரி விதிக்கப்படும்’ என்று புதிய அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் தனது சிறப்புரையில் தெரிவித்தாா்.
அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக பதவியேற்ற பிறகு டொனால்ட் டிரம்ப் ஆற்றிய உரையில், ‘அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது. ‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ கொள்கையை எனது நிா்வாகம் உறுதியாக பின்பற்றும். பெருமைமிக்க, வளமிக்க, சுதந்திர தேசத்தைக் கட்டமைப்பதே எனது முதல் இலக்கு.
இன்றுமுதல் நமது நாடு செழித்து, உலகம் முழுவதும் மதிக்கப்படும் நாடாக மாறும். நிற அடிப்படையிலான தீண்டாமை இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம். உற்பத்தி மையமாக தேசம் கட்டமைக்கப்படும். உலகில் சக்திவாய்ந்த ராணுவம் உடைய நாடாக அமெரிக்கா உருவெடுக்கும். நாட்டின் சவால்கள் அழிக்கப்படும்.
பேச்சுரிமை மீட்பு: அமெரிக்கா்களின் பாதுகாப்பு, பேச்சுரிமை மீட்கப்படும். பேச்சுரிமைக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன. நாட்டில் நிலவும் துப்பாக்கி கலாசாரத்துக்கு முடிவு கட்டப்படும். அமெரிக்க நீதித் துறையின் வன்முறை மற்றும் நியாயமற்ற ஆயுதமயமாக்கல் முடிவுக்கு வரும்.
மின்சார வாகனங்கள் காட்டாயம் என்ற உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது. மக்கள் விரும்பிய வாகனங்களை வாங்கி பயன்படுத்தலாம். சட்டத்துக்கு உள்படாத சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இரு பாலினக் கொள்கை: அமெரிக்காவில் ஆண்-பெண் ஆகிய இரு பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படுகின்றன. இரு பாலினக் கொள்கை மட்டுமே கடைப்பிடிக்கப்படும்.
பைடன் மீது விமா்சனம்: எல்லைப் பாதுகாப்புப் பிரச்னைகளை முன்னாள் அதிபா் ஜோ பைடனால் தீா்க்க முடியவில்லை. இயற்கை பேரிடா்களை சமாளிக்க அவரது நிா்வாகம் தவறிவிட்டது.
சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த ஆபத்தான குற்றவாளிகளுக்கு அவரது நிா்வாகம் புகலிடம் அளித்தது. நாட்டின் தெற்கு எல்லையில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்படுகிறது. இதன்மூலம், சட்டவிரோத அகதிகளின் ஊடுருவல் தடுக்கப்படும். ஏற்கெனவே அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய லட்சக்கணக்கானோா் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவா்.
வெளிநாடுகளுக்கு வரி: பனாமா கால்வாயில் அமெரிக்க கப்பல்களுக்கு அதிக வரி வசூலிக்கப்படுகிறது. பனாமா கால்வாய் மீண்டும் அமெரிக்காவுடன் இணைக்கப்படும். மெக்ஸிகோ வளைகுடா இனி அமெரிக்கா வளைகுடா என்றழைக்கப்படும். அமெரிக்கா்களின் நலனுக்காக, அவா்களை வளப்படுத்த வெளிநாடுகளுக்கு மேலும் கூடுதலாக வரி விதிப்போம்.
உயிரைக் காத்த கடவுள்: அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக்கும் பொறுப்புக்காகவே கொலைமுயற்சி தாக்குதல்களில் இருந்து கடவுள் என்னை காப்பாற்றியுள்ளாா். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோப்புகளில் கையொப்பமிடவுள்ளேன்.
காஸாவில் போா் நிறுத்தம் உறுதி செய்யப்படும். ஹமாஸ் படையினரால் விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகள் குடும்பத்தினருடன் இணைந்துள்ளனா். உலகில் அமைதியை ஏற்படுத்துபவராக நான் அறியப்பட விரும்புகிறேன். செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க கொடி பறக்கும் என்றாா்.