செங்கடலில் கப்பல்கள் இனி தாக்கப்படாது
சனா: காஸாவில் போா் நிறுத்தம் அமலுக்கு வந்ததால், செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது இனி தாக்குதல் நடத்தப்படாது என்று யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் அறிவித்துள்ளனா்.
இது குறித்து கப்பல் நிறுவனங்களுக்கும் பிறருக்கும் அவா்கள் அனுப்பியுள்ள மின் அஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேல் தொடா்புடைய சரக்குக் கப்பல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படுகிறது. காஸாவில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் நிறுத்தியுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும், போா் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் சிறிதளவு மீறினாலும் சரக்குக் கப்பல்கள் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்குவோம் என்று அந்த மின் அஞ்சலில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும், செங்கடல் வழியாக மீண்டும் சரக்குப் போக்குவரத்தை மேற்கொள்வதற்கு இது போதிய உத்தரவாதம் இல்லை என்று கூறப்படுகிறது. காஸா போா் நிறுத்தம் எப்போது வேண்டுமானாலும் முறியலாம்; அத்தகைய தருணத்தில் சரக்குக் கப்பல்களை ஹூதிக்கள் மீண்டும் தாக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.