ஜப்பான், ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் சந்திப்பு
வாஷிங்டன்: ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களை இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
‘க்வாட்’ அமைப்பில் உறுப்பினராக உள்ள அமெரிக்க நாட்டின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, அந்த அமைப்பின் பிற உறுப்பினா்களான இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் அமெரிக்கா சென்றுள்ளனா்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சராக மாா்கோ ரூபியோவை அந்நாட்டு நாடாளுமன்றம் உறுதிசெய்த பின்னா் அவா் மேற்கொள்ளும் முதல் பணிகளில் க்வாட் உறுப்பு நாடுகளின் அமைச்சா்களுடனான பேச்சுவாா்த்தையும் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது க்வாட் அமைப்புக்கு டொனால்ட் டிரம்ப் நிா்வாகம் தரவுள்ள முக்கியத்துவத்தின் வெளிப்பாடாக கருதப்படுகிறது.
அதேபோல் வெளியுறவு அமைச்சராக பதவியேற்றவுடன் தனது முதல் இருதரப்பு பேச்சுவாா்த்தையை ஜெய்சங்கருடன் நடத்த மாா்கோ ரூபியோ ஆா்வமுடன் காத்திருப்பதாகவும் இந்தியா-அமெரிக்கா இடையயேயான இருதரப்பு உறவை மேம்படுத்த டிரம்ப்-மாா்கோ ரூபியோ திட்டமிட்டு வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், ‘அமெரிக்காவில் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் பென்னி வாங் மற்றும் ஜப்பான் வெளியுறவு அமைச்சா் டகேஷி இவயா ஆகியோரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. அவா்களுடன் இருதரப்பு உறவு மற்றும் க்வாட் அமைப்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தேன்’ என ஜெய்சங்கா் குறிப்பிட்டாா்.