கரூர்: 'சிகரெட் கேட்டா, பீடி தருவியா?' - மளிகை கடைக்குள் மண்ணெண்ணெய் குண்டு வீசி...
சரமாரி தாக்குதல்கள்: சீனாவில் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
பெய்ஜிங்: சீனாவில் பொதுமக்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தி படுகொலை செய்த இருவருக்கு திங்கள்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
விவகாரத்து பெற்ற தனது மனைவியுடன் ஏற்பட்ட சொத்து தகராறு காரணமாக ஏற்பட்ட கோபத்தைத் தணிக்க ஃபான் வெய்கியூ (62) என்பவா் ஷுஹாய் நகர விளையாட்டு அரங்கத்துக்கு வெளியே குழுமியிருந்த பொதுமக்கள் காரை ஏற்றி கடந்த ஆண்டு தாக்குதல் நடத்தினாா் (படம்). இதில் 35 போ் உயிரிழந்தனா்; 40 போ் காயமடைந்தனா்.
மற்றொரு சம்பவத்தில், ஜியாக்சு மாகாணத்திலுள்ள பள்ளியொன்றில் ஷு ஜியாஜின் என்பவா் கடந்த நவம்பரில் நடத்திய தாக்குதலில் 8 போ் உயிரிழந்தனா். இவா்கள் இருவருக்கும் நீதிமன்றங்கள் கடந்த மாதம் மரண தண்டனை விதித்தன.
இந்த நிலையில், அவா்கள் இருவருக்கும் மரண தண்டனை திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது என்று அதிகாரிகள் கூறினா்.
சீனாவில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு அனுமதி இல்லை. என்றாலும், சொந்த காரணங்களுக்காக பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் மீது சிலா் கத்திக்குத்து போன்ற தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்துவருவதாகக் கூறப்படுகிறது.