Mahatma Gandhi: ``காந்தி கொலையை ஏற்பாடு செய்தது நேரு" - பாஜக எம்.எல்.ஏ சர்ச்சைப் பேச்சு
சுதந்திர இந்தியாவின் தந்தை என்றழைக்கப்படும் மகாத்மா காந்தி, நாடு சுதந்திரமடைந்த ஆறாவது மாதத்திலேயே நாதுராம் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்டார். வரலாற்றிலும் இதுவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கர்நாடக பாஜக எம்.எல்.ஏ பசங்கவுடா பாட்டீல் யத்னல், காந்தியைக் கொல்ல முன்னாள் பிரதமர் நேரு ஏற்பாடு செய்திருக்கலாம் என்று பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.
பெலகாவியில் காங்கிரஸ் தலைமையில் நடைபெறும் மாகாத்மா காந்தி தொடர்பான மாநாட்டை விமர்சித்து ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் இதனைத் தெரிவித்த பசங்கவுடா பாட்டீல் யத்னல், ``கோட்சே சுட்டது ஒரு தோட்டா, ஆனால் அவரின் (காந்தி) மூன்று தோட்டாக்கள் இருந்தது. அந்த இரண்டு தோட்டாக்கள் எங்கிருந்து வந்தது? அதை யார் செய்தது?
நேரு தான் அதை ஏற்பாடு செய்தாரா? அவர் சர்வாதிகாரியாக இருக்க விரும்பியதால் அந்தப் படுகொலைக்கு நேரு ஏற்பாடு செய்ததாக நான் சந்தேகிக்கிறேன். கோட்சே சுட்ட துப்பாக்கியால் காந்தியின் மூச்சு நிற்கவில்லை. நீதிமன்ற வாதத்தின்போது, மீதியிருந்த இரண்டு தோட்டாக்களை யார் வீசியது என்ற கேள்வியும் எழுந்தது.
ஒரு தோட்டா கோட்சேவால் சுடப்பட்டது, மற்ற இரண்டு பிறரால் சுடப்பட்டது. அதன் அர்த்தம், காந்தி கொலையை நேரு ஏற்பாடு செய்தார். இன்றைய காங்கிரஸ்காரர்களுக்கும் காந்திக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. நடக்கவிருப்பது போலி காந்திகளின் மாநாடு. காந்தியின் கொள்கைகளை அவர்கள் பின்பற்றவில்லை.
காந்தியின் போர்வையில் நாடகம் நடத்துகிறார்கள். மேலும், அம்பேத்கரை காங்கிரஸ் அவமதித்திருக்கிறது. ஜெய் பீம் என்று கூற அவர்களுக்குத் தகுதியில்லை." என்று கூறினார். பசங்கவுடா பாட்டீல் யத்னலின் இத்தகைய பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...