யுஜிசி புதிய விதிகள்: கேரள சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றம்!
திருப்பூர்: விபரீதத்தில் முடிந்த பிராங்க்; தற்கொலைக்குத் தூண்டியதாக இரண்டு கல்லூரி மாணவர்கள் கைது!
திருப்பூர் நல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பச்சையப்பன் நகர் முதல் வீதியைச் சேர்ந்த இருசக்கர வாகன மெக்கானிக் நாகராஜ். இவரது மனைவி வேலுமணி. மகன் சத்யநாராயணன் (21). கோவை காளப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் சத்யநாராயணன் 3-ஆம் ஆண்டு படித்து வந்தார். நாள்தோறும் திருப்பூரில் இருந்து கோவைக்கு பேருந்தில் சென்று படித்து வந்தார். இந்நிலையில், ஜனவரி 5-ம் தேதி காலை சத்யநாராயணன் வீட்டில் உள்ள அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த பெற்றோர் அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.
இத்தகவல் அறிந்து வந்த நல்லூர் போலீஸார் சத்யநாராயணின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே தற்கொலை செய்வதற்கு முன்பு சத்யநாராயணன் தனது கல்லூரி பேராசிரியர்கள், உறவினர்கள் மற்றும் சிலருக்கு வாட்ஸ்அப்பில் ஆடியோ ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில், “இனி எப்படி கல்லூரிக்குச் செல்வேன்? செல்போனில் மிரட்டியதில் இருந்து எனக்கு பயமா இருக்கு. இரவெல்லாம் தூங்க முடியவில்லை. சாப்பிடவும் முடியவில்லை. அதே ஞாபகமாக இருக்குது. மீண்டும் என்னை மிரட்டினால் நான் என்ன செய்வேன்? யாரிடம் சொல்வேன் என்றும் தெரியவில்லை. கல்லூரிக்கு வருவதற்கே பயமாக உள்ளது." என அழுதபடி பதிவிட்டுள்ளார். இதனால், கல்லூரியில் ஏதேனும் பிரச்னையா? என போலீசார் விசாரணையில் இறங்கினர்.
அதில், கல்லூரியில் பயிலும் சக மாணவா்கள் பிராங்க் என்ற பெயரில் சத்யநாராயணனை, செல்போனில் தொடர்பு கொண்டு பல நாள்களாக கிண்டல் செய்துள்ளனர். மற்ற மாணவர்கள் முன்பும் அவரை கிண்டல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், கடந்த சில நாள்களாக கடும் பயம் மற்றும் மன உளைச்சலில் சத்யநாராயணன் இருந்துள்ளார். இதன் காரணமாக அவா் தனது பிறந்த நாளுக்கு முன் தினம் தூக்குப் போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடா்பாக முதற்கட்டமாக தற்கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், சத்யநாராயணனை தற்கொலைக்குத் தூண்டியதாக அவர் உடன் பயின்ற இருவரை நல்லூர் போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர். பிராங்க் என்ற பெயரில் விளையாட்டு ஒரு மாணவரின் உயிரைப் பறித்ததுடன், இரண்டு பேரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது, திருப்பூர் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.