Ilaiyaraaja: `நான் வருகிறேன்'- எந்தெந்த ஊர்களில் இசைக் கச்சேரி? - அப்டேட் கொடுத...
கோவை: ஓடைக்குள் இடிந்து விழுந்த வீடு - கண் இமைக்கும் நேரத்தில் திக்... திக்..!
கோவை ரத்தினபுரி பகுதியில் சங்கனூர் ஓடை செல்கிறது. இந்த ஓடையின் கரையில் சுரேஷ் என்பவர் கான்கிரீட் வீடு கட்டி வசித்து வருகிறார். கடந்த சில நாள்களாக சங்கனூர் ஓடையை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு சுரேஷ் மற்றும் அவரின் அருகில் இருந்த வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
திடீரென கண் இமைக்கும் நேரத்தில் சுரேஷின் வீடு அப்படியே இடிந்து சங்கனூர் ஓடைக்குள் விழுந்து நொறுங்கியது. ஓடை தூர்வாரப்பட்டதால் மண்ணரிப்பு ஏற்பட்டு வீடு இடிந்து விழுந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
சுரேஷ் குடும்பத்தினர் கடந்த சில நாள்களாக அந்த வீட்டில் வசிக்காமல் வேறு இடத்தில் தங்கியுள்ளனர். அருகில் இருந்த மக்களும் சுதாரித்துவிட்டனர். இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. வீட்டில் விரிசல் ஏற்பட்டவுடன் பொதுமக்களே அந்த பக்கம் யாரையும் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.
வீடு இடிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சம்பவ இடத்தில் மாநகராட்சி அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு செய்தனர். இதேபோல மேலும் சில வீடுகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
‘தூர்வாரும் பணியின்போது அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை.’ என்று அந்த மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “ரூ.49 கோடி மதிப்பில் 2.3 கிலோ மீட்டர் தொலைவுக்கு சங்கனூர் பள்ளம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
பள்ளத்தை தூர்வாரி அடைப்புகளை அகற்றுவதுடன் ஆக்கிரமிப்பை தடுக்க சுவரும் கட்டப்படுகிறது. அந்தப் பகுதியில் சுமார் 3,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த மக்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.” என்றனர்.