மகன் தந்தைக்காற்றும் உதவி..! தந்தைக்கு ஸ்போர்ட்ஸ் பைக்கை பரிசளித்த ரிங்கு சிங்!
கிம் ஜாங் உன் நலமா? - நக்கலாக விசாரித்த டொனால்ட் ட்ரம்ப் - இனி வட கொரியா என்னவாகும்?
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றப் பின் தென் கொரியாவில் உள்ள அமெரிக்க ராணுவத்தினரிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், நக்கலான தொனியில், "கிம் ஜாங் உன் நலமாக இருக்கிறாரா?" என்று விசாரித்தார்.
என்ன நடந்தது?
தென் கொரியாவில் அமெரிக்காவின் ராணுவ தளம் அமைந்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் தென் கொரியா - வட கொரியா இடையே பதற்ற சூழல் கடந்த பல தசாப்தங்களாக நிலவி வருகிறது. தென் கொரியா சார்பாக இருக்கும் அமெரிக்கா அங்கு தன் ராணுவ தளத்தை அமைத்துள்ளது.
நேற்று அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், தென் கொரியாவில் ராணுவ தளத்தில் உள்ள ராணுவத்தினரிடம் பேசினார். அப்போது, "ஹெல்லோ.. அங்கு எல்லாரும் எப்படி இருக்கிறீர்கள்? கிம் ஜாங் உன் எப்படி இருக்கிறார்?" என்று விசாரித்தார்.
இதன் காரணமாக அங்கு சிரிப்பலை நிலவியது.
வட கொரியா இனி என்னவாகும்?
சரி. டிரம்பின் நக்கல் ஒரு புறம் இருக்கட்டும். இனி வட கொரியா என்னவாகும் ? கிம் ஜாங் உன் நிலைப்பாடு இனி எப்படி இருக்கும்? இந்த கேள்விகள் நமக்கு எழலாம். அது இயல்பானதே.
ஆனால். இதற்கான ஒற்றை பதில் கிம் மகிழ்வார். ஏன் இந்த மகிழ்ச்சியை அவர் கொண்டாடவும் கூட செய்யலாம்.
ஏனெனில், ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக வேண்டும் என எலான் மஸ்க் அளவுக்கு விரும்பியவர் கிம். என்ன மஸ்க்கால் இதனை வெளியே சொல்ல முடிந்தது. பிரசாரம் செய்ய முடிந்தது. நிதி ஆதரவு அளிக்க முடிந்தது. ஆனால், கிம் ஜாங் உன்னால் இதனை செய்ய முடியவில்லை. அவ்வளவுதான் வித்தியாசம்.
இது ஏதோ கற்பனை அல்ல. இட்டுகட்டுதலும் அல்ல. இதை சொன்னவர் கியூபாவிற்கான முன்னாள் வட கொரிய தூதர் ரி இல் கியூ.
வட கொரியாவுடன் முரண்பட்டு, இப்போது தென் கொரியாவில் அடைகலம் புகுந்திருக்கும் ரில் ஒரு பேட்டியில் இவ்வாறாக கூறினார் : "ட்ரம்ப் அமெரிக்க அதிபராக ஆவதை கிம் ஜாங் உன் நிச்சயம் விரும்புவார். தங்களது அணு ஆயுத திட்டங்கள் குறித்து விவாதிக்க, பேச்சு வார்த்தை நடத்த ட்ரம்ப்தான் சரியான நபர் என வட கொரியா கருதுகிறது." என்றார்.
இது ஏதோ ஒரு தலை காதல் அல்ல. கடந்தாண்டு ஜுலை மாதம் நடந்த ஒரு பேரணியில் ட்ரம்பும், "கிம் என்னை மிகவும் மிஸ் செய்வார்." என்றார். இது நக்கல் தொனியா இல்லை அகங்காரமா என்பது வேறு விவாதம். ஆனால், ட்ரம்ப் காலத்தில்தான் அமெரிக்காவும் வட கொரியாவும் பேச்சு வார்த்தை நடத்தியது. கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை தணிக்க சில ஆக்கப்பூர்வ முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஏன்... 2018 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் ட்ரம்பும், கிம்மும் சந்தித்துக் கொண்டார்கள். பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
"கிம் ஜாங் உன்னிடம் நாங்கள் காதலில் விழுந்துவிட்டோம். கடிதங்கள் பரிமாறி கொள்கிறோம்," என்றெல்லாம் அந்த சமயத்தில் கூறினார் ட்ரம்ப். (அதற்கு சில மாதங்கள் முன்புதான், `கிம் ஒரு பைத்தியகாரர். சொந்த மக்கள் பசியில் சாவது குறித்து கவலைகொள்ளாத ஒரு நபர்’ என ட்வீட் செய்திருந்தார் ட்ரம்ப்.)
ஆனால், இந்த காதல் வெகுநாட்கள் நீடிக்கவில்லை. இருவரும் மீண்டும் முறைத்து கொண்டார்கள். அவர்கள் சிங்கப்பூரில் கையெழுத்திட்ட உடன்படிக்கைகள் அனைத்தும் படுத்தபடுக்கை ஆனது.
ஜோ பைடனிடம் ட்ரம்ப் தோல்வி அடைந்த பின்பும், கிம்மிடம் ட்ரம்ப் தொடர்பில் இருப்பதாகவே 2022-இல் பேசப்பட்டது.
சரி. ட்ரம்ப் அமெரிக்க அதிபராக வேண்டும் என கிம் நினைக்க காரணம் என்ன? ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால், தடாலடியான முடிவுகள் எடுப்பதில் ட்ரம்ப் அமெரிக்காவின் கிம்; கிம் வட கொரியாவின் ட்ரம்ப். முன்னவருக்கு ஜனநாயகம் ஒரு தடைக்கல். பின்னவருக்கு சர்வாதிகாரம் ஒரு படிக்கல்.
ட்ரம்ப் - கிம் சில ஒற்றுமைகள்
ஆசிய நாடுகள் குறித்து ஆய்வு செய்து தொடர்ந்து எழுதி வரும் ஐசக் ஸ்டோன் ஃபிஷ், "ட்ரம்புக்கும் கிம்முக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன." என்கிறார்.
"அவர்கள் இருவரும் வளமான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள். இருவரும் தன் தந்தையின் நிழலில் வளர்வதை பெரிதாக ரசிக்காதவர்கள். இருவரும் தாங்கள் விரும்பியது மட்டும்தான் நடக்க வேண்டும் என விரும்புபவர்கள். தங்கள் எதிரிகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாடு எடுத்தவர்கள்," என ஒரு கட்டுரையில் இருவருக்கும் உள்ள ஒற்றுமைகளை பட்டியலிட்டு உள்ளார்.
ஜனநாயக நாட்டை சேர்ந்த ட்ரம்ப், தான் எதிர்பார்த்த அளவுக்கு பணியாற்றாத ஊழியர்களுக்கு மீண்டும் எந்தவொரு சந்தர்ப்பமும் தராமல் பணியைவிட்டு பல முறை நீக்கி இருக்கிறார். சர்வாதிகார நாட்டின் அதிபரான கிம், அப்படியானவர்களை உலகத்தை விட்டே நீக்கி இருக்கிறார்.
தன் கருத்துகளுக்கு உடன்படாதவர்களை ட்ரம்ப் ட்விட்டரில் கிண்டல் செய்வார். கிம் அவர்களை சிறைச்சாலைகளுக்கு அனுப்புவார். குவிந்திருக்கும் அதிகாரத்திற்கு ஏற்றவாரு எதிர்வினை இருக்கிறதே தவிர, நோக்கம் ஒன்றுதான். சொல்வதை கேள். எதிர்த்து பேசாதே. அவ்வளவுதான்.
சரி. மீண்டும் தலைப்புக்கு வருகிறேன். இனி வட கொரியா என்னவாகும்?
மீண்டும் பேச்சுவார்த்தை
கிழக்கு ஆசிய பிராந்தியம் குறித்து தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வரும் காங் வூ, "அணு ஆயுத திட்டங்கள் குறித்து கிம்முடன் பேச்சுவார்த்தை நடத்த ட்ரம்ப் குழு தயாராக இருக்கிறது," என்கிறார்.
ஆனால், அதே சமயம் கிம் அமெரிக்கா விஷயத்தில் கடுமை நிலைப்பாட்டையே கடந்த மாதம் எடுத்து இருந்தார்.
வட கொரியாவில் கடந்த மாதம் நடந்த ஆளும் தொழிலாளர் கட்சியின் ஐந்து நாள் கூட்டத்தில், கிம் அமெரிக்காவின் கம்யூனிச எதிர்ப்பை கடுமையாக விமர்சித்தார். அமெரிக்கா-தென் கொரியா-ஜப்பான் பாதுகாப்பு கூட்டாண்மை ,ஆக்கிரமிப்புக்கான அணு ஆயுத இராணுவக் கூட்டாக விரிவடைந்து வருவதாக கிம் அப்போது கூறினார்.
அதை தொடர்ந்து ஜனவரி மாதம் மீண்டும் வட கொரியா இரண்டு இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதித்தது.
வட கொரியா கடந்த காலங்களை போல ஏழ்மையான சூழலில் இல்லை. உக்ரைன் ரஷ்யா போரில், அதிக பணம் ஈட்டிய நாடு வட கொரியா தான். முன்பு ரஷ்யாவுக்கு ஆயுதங்களை விற்றது. இப்போது தன் ராணுவத்தினரையே ஏற்றுமதி செய்துக் கொண்டிருக்கிறது. சீனாவுடனும் வணிகங்கள் நடப்பதாகவே தெரிகிறது.
வட கொரியா உணர்த்த விரும்புவது இதனை தான. நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார். ஆனால், நாங்கள் அச்சப்பட்டு பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. நாங்கள் முன் எப்போதையும் விட பலமாக இருக்கிறோம். எங்களை எந்த ஒரு நலனையும் பலிகடாவாக்கி சமரசத்துக்கு வர முடியாது என்பதைதான்.