சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பெறாததில் வருத்தமில்லை: சூர்யகுமார் யாதவ்
TVK : 'கெடுபிடி போலீஸ்; ஆதங்கத்தில் மக்கள்; ஸ்கோர் செய்த விஜய்' - பரந்தூர் விசிட் ஸ்பாட் ரிப்போர்ட்
தமிழக வெற்றிக் கழக தலைவரான விஜய் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடிய போராட்டக்குழுவை சந்தித்து பேசியிருக்கிறார். பரந்தூர் அருகே பொடவூர் என்கிற கிராமத்திலுள்ள தனியார் மண்டபத்தில் இந்த சந்திப்பு நடந்திருந்தது. போலீஸாரின் கடும் கெடுபிடிக்கு மத்தியில் ஊர் மக்களின் ஆதங்கத்தோடு நடந்து முடிந்திருக்கும் இந்த சந்திப்பின் ஸ்பாட் ரிப்போர்ட் இங்கே.
கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி விஜய் கட்சியை ஆரம்பித்திருந்தார். இன்னும் சில தினங்களில் கட்சித் தொடங்கிய முதலமாண்டு தினமும் நடக்கவிருக்கிறது. ஆனாலும் அவர் பெரிதாக களத்திற்கு வந்து எந்த பிரச்னைக்குமே குரல் கொடுக்காமல் இருந்தார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கூட பனையூர் அலுவலகத்துக்கு அழைத்துதான் நிவாரண உதவிகளை வழங்கியிருந்தார். சமூகவலைதளங்களில் அறிக்கை, அவ்வபோது பரபரப்பான மேடைப்பேச்சுகள் என்பது மட்டுமே விஜய்யின் அரசியலாக இருந்தது. இதனாலேயே 'Work From Home' அரசியல்வாதி என்றும் விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில், முதல் முறையாக விஜய் களத்துக்கு வருகிறார் என்றவுடன் எதிர்பார்ப்பு உண்டானது.
ஏகனாபுரம், பரந்தூர், நாகப்பட்டு, நெல்வாய், மேலேரி, மாரிமங்களம், பொடவூர், அக்மாபுரம், மடப்புரம், இடையார்பாக்கம், வளத்தூர், தண்டளம், நெலம்பூர், சிங்கிள்பாடி என இந்த 13 கிராமங்களும்தான் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தில் பாதிக்கப்படுகிறது. இதில் ஏகனாபுரம், நாகப்பட்டு, நெல்வாய், மேலேரி என நான்கு கிராமங்களும் இந்தத் திட்டத்திற்காக முழுவதுமாக எடுக்கப்படவிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் அந்த மக்கள் 900 நாட்களை கடந்தும் போராடி வந்தனர்.
விஜய் கட்சி ஆரம்பித்த சமயத்திலிருந்தே போராட்டக் குழுவினர் விஜய் தரப்புடன் தொடர்பிலேயே இருந்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்துதான் இந்த சந்திப்பும் நடந்திருக்கிறது. போராட்டத்தின் 910 வது நாளில் விஜய் பாதிக்கப்பட்ட ஏகனாபுரம் கிராமத்துக்கு செல்லலாம் என தவெக தரப்பு முடிவு செய்தனர்.
காவல்துறையிடன் தவெக தரப்பில் விஜய்யின் விசிட்டிற்காக அனுமதியும் கேட்டிருந்தனர். தவெக தரப்பு 19 அல்லது 20 என இரண்டு தேதிகளை குறிப்பிட்டு அனுமதி கேட்டிருந்தனர். காவல்துறை 20 ஆம் தேதிக்கு அனுமதி கொடுத்தது.
சந்திப்பு நிகழ்வதற்கு முந்தைய நாளிலிருந்தே காவல்துறை கெடுபிடிகளை தொடங்கிவிட்டது. முதலில் ஏகனாபுரத்தில் உள்ள அம்பேத்கர் திடலில் சந்திப்பை நடத்தவே திட்டமிட்டிருந்தனர். போராடும் மக்களும் அந்த இடத்தில்தான் சந்திப்பை நடத்த விரும்பியிருக்கின்றனர். காவல்துறை தரப்பிலும் அதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஊர் மக்களும் மைதானத்தை தூர்வாரி விஜய்யை வரவேற்று சந்திப்பை நடத்த இடத்தை தயார்ப்படுத்தியிருக்கின்றனர்.
ஆனால், காஞ்சிபுரம் காவல்துறை தரப்பில் திடீரென இதற்கு முட்டுக்கட்டை போடப்பட்டிருக்கிறது. திறந்தவெளி மைதானத்தில் விஜய் மக்களை சந்தித்தால் அதிக கூட்டம் கூட வாய்ப்பிருக்கிறது. அவரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அருகிலுள்ள பொடவூர் கிராமத்தில் சந்திப்பை நிகழ்த்துங்கள் என காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. ஊர் மக்களும் தவெக தரப்பும் இதில் கடும் அப்செட். காஞ்சிபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இது சம்பந்தமான பேச்சுவார்த்தை 19 ஆம் தேதி நள்ளிரவு வரை நடந்திருந்தது.
காவல்துறை தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து பின் வாங்கவில்லை. இறுதியாக வேறு வழியே இல்லாமல்தான் பொடவூரில் உள்ள தனியார் மண்டபத்துக்கு சந்திப்பு மாற்றப்பட்டிருக்கிறது. 'முழுசா அழியப்போறது எங்க ஊருதான்...எங்க ஊருக்கு அவர விடாம பக்கத்துக்கு ஊருக்கு வர சொல்றது நியாயமா?' என மக்களும் கொந்தளித்தனர். இதைத விஜய்யே தனது பேச்சிலும் குறிப்பிட்டுப் பேசினார். 'நான் உங்களை உங்க ஊர்ல சந்திக்கணும்னுதான் நினைச்சேன். ஆனா அனுமதி கிடைக்கலை. ஏன்னு தெரியலை!' எனப் பேசியவர் 'துண்டுச்சீட்டு கொடுத்த எங்க பிள்ளைங்களையும் கைது பண்ணாங்க!' என்றும் கூறி தொடர்ச்சியாக தவெக மீது காவல்துறை கெடுபிடி காட்டுகிறது என்பதை அழுத்தமாக பேசினார்.
மதியம் 11-1 மணிக்குள் விஜய் மக்களை சந்திப்பார் என்றே நேரம் குறிக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட கிராம மக்களை விஜய் சந்திக்க செல்கிறார், கூடவே காவல்துறை கெடுபிடியும் அதிகமாக இருக்கும் என்பதால் மற்ற மாவட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் பரந்தூர் வருவதை தவிர்க்க வேண்டும் என தவெக தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருந்தும் பல மாவட்டங்களிலிருந்தும் நிர்வாகிகள் பரந்தூரை நோக்கி வர ஆரம்பித்தனர்.
பொடவூர் மண்டபத்துக்கு 8 கிலோ மீட்டருக்கு முன்பாகவே செக்போஸ்ட் அமைத்து போலீஸார் அவர்களை மறித்தனர். காஞ்சிபுரம் மற்றும் அதைச்சுற்றியிருக்கும் ஒன்றிரண்டு மாவட்ட நிர்வாகிகளையும் தொண்டர்களையும் மட்டுமே பலத்த பரிசோதனைக்கு பிறகு ஊருக்குள் அனுமதித்தனர். வேறு யாரும் ஊருக்குள் வந்துவிடக்கூடாது, கூட்டம் அதிகமாக கூடிவிடக்கூடாது என்பதில் காவல்துறை மிகக்கவனமாக இருந்தது. ஐடி கார்டை எடுத்து வர தவறிய ஊடகவியலாளர்கள் சிலரே காவல்துறையிடம் பேசி ஊருக்குள் நுழைய படாதபாடு பட்டனர்.
அந்த 8 கிலோ மீட்டர் செக்போஸ்டை தாண்டிய பிறகுமே உள்ளுக்குள் இன்னும் நான்கு இடங்களில் தீவிர சோதனை நடத்தியே ஆட்களை உள்ளே அனுப்பினர். மண்டபத்திற்கு இரு பக்கத்திலும் 100 மீட்டர் தூரத்துக்கு எந்த வாகனத்தையும் பார்க் செய்யவும் அனுமதிக்கவில்லை.
13 கிராம மக்களையும் பொடவூர் மண்டபத்துக்கு அழைத்து வர 35 வேன்களை ஏற்பாடு செய்திருந்தனர். விஜய் அம்பேத்கர் திடலில் தங்களை சந்திக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் என்பதால் சில கிராமத்து மக்கள் இந்த சந்திப்புக்கு செல்லலாமா வேண்டாமா என்று கூட யோசித்திருக்கின்றனர். நம்முடைய பிரச்னையை கேட்பதற்காக ஒருவர் வருகிறார், காவல்துறை அனுமதி கொடுக்காததற்கு அவர் என்ன செய்வார்? எனும் சமாதான வார்த்தைகள் போராட்டக் குழுவினரால் சொல்லப்பட்ட பிறகே அனைவரும் கிளம்பி பொடவூருக்கு வந்தனர். அவர்கள் வந்து சென்ற வேன்கள், எந்தெந்த வீட்டிலிருந்து எத்தனை பேர் வந்தார்கள் என எல்லாவற்றையும் காவல்துறையினர் கணக்கெடுத்துக் கொண்டனர். மூன்று, நான்கு வேன்களாக பிரித்து பிரித்தே நிகழ்வு நடந்த இடத்துக்கு ஊர்க்காரர்களை அனுப்பி வைத்திருந்தனர்.
10 மணியிலிருந்தே ஊர்க்காரர்கள் மண்டபத்துக்கு வரத் தொடங்கிவிட்டனர். நிகழ்வு நடந்த அந்த இடம் கல்யாண மண்டபம் மட்டுமல்ல. அது ஒரு ரெசார்ட் செட்டப்பிலும் இருந்தது. காவல்துறை தரப்பில் உள்ளரங்கில்தான் விஜய் மக்களை சந்திக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது. அதற்கு தவெக தரப்பு ஒத்துக்கொள்ளவே இல்லை. இறுதியாக அந்த வளாகத்துக்குள் இருக்கும் புல்வெளியில் விஜய் மக்களை சந்திப்பார் என முடிவானது. விஜய்யின் துபாய் பவுன்சர்கள் டீமும் மண்டப வளாகத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தது.
நீலாங்கரை வீட்டிலிருந்து காரில் கிளம்பிய விஜய் காஞ்சிபுரம் அருகே ஒரு ஹோட்டலில் கொஞ்சம் இளைப்பாறிவிட்டு அங்கிருந்து தனது புதிய பிரசார வாகனத்தில் பொடவூரை நோக்கி விரைந்தார். காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து இடதுபக்கமாக உள்ளே திரும்பி 10 கிலோ மீட்டருக்கு மேல் சென்றால்தான் பொடவூர் மண்டபத்தை எட்ட முடியும். நெடுஞ்சாலையிலிருந்து கட் ஆகி ஊருக்குள் வரும் சாலையிலிருந்தே விஜய்க்கு அவரது தொண்டர்கள் வரவேற்பு கொடுக்க தொடங்கிவிட்டனர்.
அதேநேரத்தில் பொடவூர் மண்டபத்தில் ஊர்க்காரர்களோடு வெளியூரிலிருந்து வந்திருந்த தவெக தொண்டர்களும் கலந்திருந்தனர். மைக்கை பிடித்த ஆனந்த் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேலாக 'ஏப்பா...வெள்ளை சட்டை..' என மாநாடு பாணியில் போராடி ஊர்க்காரர்களை தனியாக பிரித்தெடுத்து முன்னே அழைத்துக் கொண்டார்.
சரியாக 12:30 மணிக்கு விஜய் பொடவூர் மண்டப வளாகத்துக்குள் நுழைந்தார். 12:39 மணிக்கு தன்னுடைய பேச்சை தொடங்கியவர் 12:50 மணி வரை பேசியிருந்தார். அந்த 11 நிமிட பேச்சில் ஆளுங்கட்சியான திமுக-வை மீண்டும் ஒரு முறை புரட்டியெடுத்திருந்தார். 'அரிட்டாப்பட்டில உங்களோட நிலைப்பாடை பாராட்டுறேன். அரிட்டாப்பட்டி மக்களை மாதிரிதான பரந்தூர் மக்களும்...' என விஜய் பேசியதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருந்தது. 'நம்புற மாதிரி நாடகம் ஆடுறதுல நீங்கதான் கில்லாடியச்சே..' என பேசி தனது திமுக எதிர்ப்பை இன்னும் வலுவாக பதிய வைத்தார்.
விஜய் பேசி முடித்தவுடன் போராட்டக்குழுவினரின் சார்பில் அவருக்கு பச்சை துண்டு போர்த்தப்பட்டது. அதை வாங்கிக் கொண்டவர், 'நான் எப்போதும் உங்களுக்கு ஆதரவா இருப்பேன்..' என வாக்குறுதியும் கொடுத்திருக்கிறார். சந்திப்பை முடித்துவிட்டு அந்த வளாகத்திலிருந்து வெளியே வரும் வரை கூடியிருந்த மக்களை நோக்கி உற்சாகமாக கையசத்தப்படி சென்று விடைப்பெற்றார்.
'விஜய் மூலம் எங்க பிரச்னை இந்தியா முழுவதும் போய் சேருது. எங்களுக்கு இன்னும் அதிகம் வெளிச்சம் கிடைக்குது.' என போராட்டக்குழுவினர் மகிழ்ந்ததையும் பார்க்க முடிந்தது.
விஜய் முதல் முதலாக களத்துக்கு வந்திருக்கிறார். அரசியல் என்பது அன்றாட செயல்பாடாக இருக்க வேண்டும். கால்ஷீட் ஒதுக்கி மக்களுக்கான அரசியலை செய்ய முடியாது. பரந்தூர் களத்தின் மூலம் விஜய் அதை ஒரு படிப்பினையாக எடுத்துக்கொள்வார் என நம்புவோம்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs