அரசமைப்புச் சட்டத்தை வகுத்ததில் பிராமணா்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்த...
முதலில் இவரைத்தான்.. துணை அதிபர் மனைவி உஷா சிலுக்குரி வான்ஸை புகழ்ந்த டிரம்ப்!
அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, துணை அதிபர் பதவிக்கான வேட்பாளராக முதலில் உஷா சிலுக்குரி வான்ஸைத்தான் தான் தேர்வு செய்ததாகவும், அவர் மிகவும் புத்திசாலி, ஆனால், அது சரியாக செல்லவில்லை என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப், துணை அதிபராக ஜே.டி. வான்ஸ் பதவியேற்றுக் கொண்டனர். இதன் மூலம் அமெரிக்காவின் இரண்டாவது குடிமகளாகியிருக்கிறார் உஷா சிலுக்குரி. இதன் மூலம், அமெரிக்காவின் இரண்டாவது குடிமகளாகியிருக்கும் முதல் இந்திய - அமெரிக்கர் என்ற பெருமையையும் முதல் ஹிந்துப் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். அவரது கணவர் ஜே.டி. வான்ஸ் அமெரிக்காவின் 50வது துணை அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்திய மாநிலம் ஆந்திரத்தைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த உஷா சிலுக்குரி, அமெரிக்க இரண்டாவது குடிமகளாகியிருக்கும் மிக இளம் வயது பெண்ணாவும் அறியப்படுகிறார். இதற்கு முன்பு, இரண்டாவது குடிமகளாக இருந்த ஜானே ஹாட்லி பார்க்ளி என்பவர் 38 வயதில் இரண்டாவது குடிமகளாக இருந்துள்ளார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்றுக் கொண்ட டொனால்ட் டிரம்ப், தனது வெற்றி உரையின்போது, மிக அழகான என்று உஷா சிலுக்குரியை குறிப்பிட்டுப் பேசினார். நான் குறிப்பிட்ட சில காலமாக ஜே.டி.யை கவனித்து வருகிறேன். இவர் மிகச் சிறந்த செனேட்டராக இருந்தார், மிக மிக புத்திசாலி. அவர் மட்டுமல்ல, அவரது மனைவியும் மிகவும் புத்திசாலி என்றார். இதைக் கேட்டதும் அரங்கமே சிரிப்பலையால் அதிர்ந்தது.
பிறகு, ஜே.டி.யைப் பார்த்துக் கொண்டே டிரம்ப் சொன்னார், முதலில், துணை அதிபருக்கான வேட்பாளராக நான் அவரைத்தான் தேர்வு செய்தேன், ஆனால், அது அவ்வாறு செல்லவில்லை. அவர் மிகவும் சிறந்தவர், ஜே.டி.யும் மிகவும் சிறந்தவர். இந்த மிகச் சிறப்பான அழகான தம்பதிகளுக்கு மிகச் சிறந்த எதிர்காலம் உள்ளது என்று தொடர்ந்து தனது புகழாரத்தைச் சூட்டினார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவன்னா மற்றும் ஜான் ராபர்ட்ஸின் உதவியாளராக உஷா சிலுக்குரி பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உஷா சிலுக்குரி (39) பூர்வீகம்
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மனைவியும், இந்திய - அமெரிக்கரான உஷா சிலுக்குரியின் பெற்றோர் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள். உஷா சிலுக்குரியின் பெற்றோர் ஆந்திர மாநிலம் வட்லுருவைச் சேர்ந்தவர்கள் என்றும், உஷாவின் தாத்தா சென்னையில் பணியாற்றியவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உஷா சிலுக்குரியின் பெற்றோர், 1970ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவின் சாண்டியாகோ நகருக்குக் குடிப்பெயர்ந்துவிட்டனர். அங்கேயே உஷா சிலுக்குரி பல்வேறு பட்டப்படிப்புகளை முடித்தார். தற்போது துணை அதிபராகியிருக்கும் ஜே.டி. வான்ஸை, உஷா சிலுக்குரி காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.
அண்மைக் காலங்களில், வெளிநாடுகளின் அரசியலில் இந்தியர்களின் பங்கு அளப்பரியதாக மாறி வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவின் இரண்டாவது குடிமகள் ஒரு இந்திய - அமெரிக்கர் என்பது இந்தியர்களுக்கு பெருமைசேர்ப்பதாகவே உள்ளது.