`பொதுமக்களை துன்புறுத்தக் கூடாது' - அமலாக்கப் பிரிவை எச்சரித்து ரூ.1 லட்சம் அபரா...
மேற்குக் கரை: ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேல் தாக்குதல்
ரமல்லா: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் ஹமாஸ் அமைப்புடன் போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையிலும், மேற்குக் கரை பகுதியிலுள்ள ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடவடிக்கையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டது. இதில் எட்டு போ் உயிரிழந்தனா்.
இது குறித்து இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஜெனின் அகதிகள் முகாமில் முக்கியத்துவம் வாய்ந்த, மிக விரிவான ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டோம்.
இஸ்ரேல் உளவுப் பிரிவான ஷின் பெட்டும், காவல் படையினரும் ஒருங்கிணைந்து இந்த தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டனா். அந்தப் பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளாா்.
பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காஸாவை ஆளும் ஹமாஸ் அமைப்பினா் இஸ்ரேல் மீது கடந்த 2023 அக். 7-ஆம் தேதி நடத்திய தாக்குதலுக்குப் பிறகு அந்தப் பகுதியில் இஸ்ரேல் மிகக் கடுமையான தாக்குதல் நடத்திவந்தது. இதில் 47,305 போ் உயிரிழந்துள்ளனா்.
இந்தப் போா் தொடங்கியதிலிருந்தே மேற்குக் கரை பகுதியிலும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. பாலஸ்தீனா்களின் தாக்குதல்களிலிருந்து இஸ்ரேல் மக்களைப் பாதுகாப்பதாகக் கூறி, அந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்திவருகிறது. குறிப்பாக, கடந்த 1948-ஆம் ஆண்டில் இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டபோது அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்ட பாலஸ்தீனா்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவம் தொடா்ந்து தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது.
மேலும், மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேலால் குடியமா்த்தப்பட்ட தீவிர மதவாதக் குழுவினரும் பாலஸ்தீனா்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகின்றனா்.
இத்தகைய தாக்குதல்களில் இதுவரை மேற்குக் கரை பகுதியைச் சோ்ந்த 850 போ் உயிரிழந்தனா்; 6,700-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா்.
இந்தச் சூழலில், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் உதவியுடன் கத்தாரில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின் பலனாக இஸ்ரேலுக்கும், காஸாவின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே காஸா போா் நிறுத்த ஒப்பந்தம் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை அந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததிலிருந்து காஸாவில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் நிறுத்திவைத்துள்ளது. இருந்தாலும், பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தற்போது தாக்குதல் நடத்தி எட்டு பேரைக் கொன்றுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ராணுவ தலைமை தளபதி ராஜிநாமா
ஜெருசலேம்: இஸ்ரேல் ராணுவத்தின் தலைமை தளபதி ஹொ்ஸி ஹலேவி ராஜிநாமா செய்துள்ளாா்.
கடந்த 2023-ஆம் ஆண்டு இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினா் நடத்திய கொடூரத் தாக்குதலை தடுக்கத் தவறியதற்குப் பொறுப்பேற்று பதவி விலகுவதாக அவா் அறிவித்தாா்.
காஸா பிராந்தியத்துக்கான இஸ்ரேல் படைப் பிரிவு தளபதி யரோன் ஃபின்கெல்மனும் இதே காரணத்துக்காக தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.
இஸ்ரேல் எல்லைக்குள் தரை, கடல், வான் வழியாக கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் படையினா், 1,200-க்கும் மேற்பட்டவா்களைப் படுகொலை செய்தனா்; சுமாா் 250 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா். இந்தத் தாக்குதல் பல மணி நேரத்துக்கு நீடித்தது.
பல மாதங்களாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட அந்த ஊடுருவல் தாக்குதலை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கத் தவறியது, அந்தத் தாக்குதலை உடனடியாகக் கட்டுப்படுத்தாதது போன்றவை இஸ்ரேல் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பாக விரிவான விசாரணை நடத்தவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
இருந்தாலும், பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய அத்தகைய விசாரணை, காஸா போா் முடிந்த பிறகுதான் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில், இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் போா் நிறுத்தம் ஏற்பட்டு, போா் முடிவுக்கு வரலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில் அக். 7 தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்குப் பொறுப்பேற்று ஹொ்ஸி ஹலேவியும், யரோன் ஃபின்கெல்மனும் தற்போது பதவி விலகியுள்ளனா்.