`பொதுமக்களை துன்புறுத்தக் கூடாது' - அமலாக்கப் பிரிவை எச்சரித்து ரூ.1 லட்சம் அபராதம் விதித்த கோர்ட்!
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அமலாக்கப் பிரிவு மற்றும் சி.பி.ஐ போன்ற விசாரணை அமைப்புகள் உள்ளூர் போலீஸார் எதாவது வழக்குகளை பதிவு செய்திருந்தால் அதன் அடிப்படையில் தாங்களும் விசாரிப்பதுண்டு. குறிப்பாக பணமோசடி, ஊழல் தொடர்பான வழக்குகளை மத்திய விசாரணை அமைப்புகள் கையாள்வதுண்டு. மும்பையை சேர்ந்த ராகேஷ் ஜெயின் என்ற பில்டருக்கு எதிராக அவரிடம் வீடு வாங்கி இருந்த ஒருவர் மும்பை விலே பார்லா காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கப் பிரிவு பில்டருக்கு எதிராக பணமோசடி தொடர்பாக விசாரணை நடத்தி வந்தது. அதன் அடிப்படையில் சிறப்பு நீதிமன்றம் ராகேஷ் ஜெயினுக்கு சம்மன் அனுப்பி இருந்தது. அதனை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் ராகேஷ் ஜெயின் மேல் முறையீடு செய்தார்.
இம்மனு நீதிபதி மிலிந்த் ஜாதவ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இம்மனு மீதான விசாரணைக்கு பிறகு அமலாக்கப் பிரிவின் சம்மனை ரத்து செய்த நீதிபதி, அமலாக்கப் பிரிவை கடுமையாக விமர்சித்தார். நீதிபதி தனது தீர்ப்பில், ``பொதுமக்களை விசாரணை அமைப்புகள் துன்புறுத்தக் கூடாது என்ற வலுவான செய்தியை தெரிவிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அமலாக்கப் பிரிவு போன்ற மத்திய விசாரணை அமைப்புகள் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பொதுமக்களை துன்புறுத்துவதை நிறுத்தவேண்டும். குற்றச்சாட்டுக்குள்ளான ராகேஷ் ஜெயினுக்கு எதிராக போலீஸில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அப்படி இருக்கும்போது பணமோசடி விசாரணை தேவையற்றது.
இவ்விவகாரத்தில் அமலாக்கப் பிரிவு தவறாக நடந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. எனவே அமலாக்கப் பிரிவு போன்ற மத்திய விசாரணை அமைப்புகள் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படவேண்டும். எந்த விதமுகாந்திரமும் இல்லாமல் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பொதுமக்களை துன்புறுத்தக் கூடாது என்ற செய்தியை விசாரணை அமைப்புகளுக்கு தெரிவிக்கவேண்டும் என்ற நோக்கத்திற்காக அமலாக்கப் பிரிவுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த பணத்தை 4 வாரத்திற்குள் செலுத்தவேண்டும்'' என்று உத்தரவிட்டார். தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய விரும்புவதால் தீர்ப்பை ஒரு வாரத்திற்கு அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று அமலாக்கப் பிரிவு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்று ஒரு வாரத்திற்கு தனது தீர்ப்பிற்கு நீதிபதி ஜாதவ் தடை விதித்தார்.