சாம்பியன்ஸ் டிராபி: இந்திய வீரர்கள் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயருக்கு பிசிசிஐ மறுப்பு!
சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயரை பொறிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது.
பாதுகாப்பு காரணத்துக்காக பாகிஸ்தான் பயணிக்க இந்திய அணி மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து, இந்திய அணியின் போட்டிகள் மட்டும் துபையில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய வீரர்கள் அணியும் ஜெர்சியில் போட்டியை நடத்தும் பாகிஸ்தான் பெயரை பொறிக்க பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், விளையாட்டில் இந்தியா அரசியல் செய்வதாக குற்றச்சாட்டை முன்வைத்து சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் (ஐசிசி) புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பெறாததில் வருத்தமில்லை: சூர்யகுமார் யாதவ்
ஐசிசி நடத்தும் போட்டிகளில் பல ஆண்டுகளாக போட்டியை ஒருங்கிணைக்கும் நாட்டின் பெயர், பிற நாட்டு வீரர்களின் ஜெர்சியில் இடம்பெறுவது பாரம்பரியமாக உள்ளது.
இந்த நிலையில், போட்டி தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு, இந்திய அணி மறுப்பு தெரிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவும் பாகிஸ்தானும் பல ஆண்டுகளாக ஐசிசி மற்றும் ஆசிய கோப்பைகளில் மட்டுமே நேருக்குநேர் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.