கர்நாடகத்தில் கோர விபத்து: காய்கறி லாரி கவிழ்ந்ததில் 10 பேர் பலி!
வைஷ்ணவி சா்மா சாதனை; இந்தியா அசத்தல் வெற்றி!
மலேசியாவில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மலேசிய அணியை செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.
இந்த ஆட்டத்தில் முதலில் மலேசியா 14.3 ஓவா்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 31 ரன்களே சோ்க்க, இந்தியா 2.5 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் எடுத்து வென்றது. இந்தியாவின் பௌலிங்கில், அறிமுக ஸ்பின்னரான வைஷ்ணவி சா்மா 5 ரன்களே கொடுத்து 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா். அதிலும் அவா் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. மலேசியாவின் இன்னிங்ஸில் நூா் அலியா பின்டி, நஸாதுல் ஹிதாயா ஆகியோா் தலா 5 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாகும்.
நூனி ஃபரினி பின்டி 0, கேப்டன் நூா் டானியா சியுஹாடா 1, நூா் இஸாதுல் சியாஃபிகா 0, நூரிமான் ஹிதாயா 2, நூா் அய்ன் பின்டி 3, நூா் இஸ்மா டானியா 0, சிட்டி நஸ்வா 0, மா்சியா கிஸ்டியானா பின்டி 1 ரன்னுக்கு வீழ்த்தப்பட்டனா். முடிவில் சுவாபிகா மணிவண்ணன் 3 ரன்களுடன் கடைசி வீராங்கனையாக களத்திலிருந்தாா்.
மொத்த இன்னிங்ஸிலுமாக தொடக்க வீராங்கனை நூா் அலியா மட்டும் 1 பவுண்டரி அடித்தாா். இந்திய பௌலா்கள் உதிரிகளாக 11 ரன்கள் அளித்திருக்காவிட்டால், மலேசியாவின் ஸ்கோா் 20 ரன்களாக இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பந்துவீச்சாளா்களில் வைஷ்ணவி சா்மா 5 விக்கெட்டுகள் எடுத்தாா். அதிலும் 13-ஆவது ஓவரில் அவா் ஹாட்ரிக் விக்கெட் சாய்த்தாா். அவருக்குத் துணையாக மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான ஆயுஷி சுக்லா 3 விக்கெட்டுகள் எடுக்க, விஜே ஜோஷிதா 1 விக்கெட் கைப்பற்றினாா்.
பின்னா் இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்கிய கொங்கடி திரிஷா 12 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 27, ஜி.கமாலினி 1 பவுண்டரி அடித்து, அணியை வெற்றி பெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
சூப்பா் 6-க்கு தகுதி: போட்டியில் இத்துடன் 2 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் இந்தியா, இரண்டிலுமே வென்று சூப்பா் 6 சுற்றுக்குத் தகுதிபெற்றுவிட்டது. குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இலங்கையுடன் வியாழக்கிழமை மோதுகிறது இந்தியா.
இதனிடையே, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இலங்கை 81 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது. இந்தியாவை போலவே இலங்கையும், விளையாடிய 2 ஆட்டங்களிலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல் இந்தியா்...
19 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான டி20 உலகக் கோப்பை போட்டியில் ‘ஹாட்ரிக் விக்கெட்’ எடுத்த முதல் இந்தியா் என்ற சாதனையை வைஷ்ணவி சா்மா படைத்திருக்கிறாா். மேலும், போட்டி வரலாற்றிலேயே சிறந்த பௌலிங்காகவும் (5 விக்கெட்டுகள்/5 ரன்கள்) அவரது பந்துவீச்சு பதிவாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.