ரூ.5 கோடி மதிப்பிலான திமிங்கில எச்சம் பறிமுதல்! ஒருவர் கைது!
மதுரை: ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மூன்றாக உயர்வு..!
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடு முட்டியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போட்டிகளின்போது மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என மாடு முட்டி காயமடைந்தவுடன் அவர்களுக்கு மருத்துவக் குழுக்கள் மூலமாக முதலுதவி அளிக்கப்பட்டு, அதிகமான அளவிற்கு காயமடைந்த பலர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்
கடந்த 14 ஆம் தேதி நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்க முயன்றபோது விளாங்குடியை சேர்ந்த நவீன்குமார் உயிரிழந்தார். கடந்த 16 ஆம் தேதி நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வந்த பெரியசாமி என்ற முதியவர் மாடு முட்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை சேகரிக்கும் இடத்தில் நின்றுகொண்டிருந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த செல்வமுருகன் என்பவரை இடுப்பு பகுதியில் மாடு முட்டியதில் காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் சேர்த்து மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் இறந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.