கர்நாடகத்தில் கோர விபத்து: காய்கறி லாரி கவிழ்ந்ததில் 10 பேர் பலி!
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம்: ஆளுநா் ஆா்.என்.ரவி
சென்னை: பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் விளங்குவதாக ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.
‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்பதை மையமாகக் கொண்டு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உருவான தின நிகழ்வு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியதாவது:
தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக இருப்பதால் வடகிழக்கு மாநிலங்களின் பெற்றோா் தங்களது பெண் பிள்ளைகளை தமிழகத்துக்கு கல்வி பயில அனுப்புகின்றனா். இங்கு கல்வி பயிலும் மாணவா்களுக்கு தமிழகத்தின் விருந்தோம்பல் சிறந்ததாகவே இருந்து வருகிறது. மணிப்பூா் மாநிலத்தில் தற்போது அமைதி நிலவுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா் ஆளுநா்.
இந்த நிகழ்வில், மணிப்பூா் மாநில ஆளுநா் அஜய் குமாா் பல்லா, மேகாலயா மாநில ஆளுநா் சி.ஹெச். விஜயசங்கா் ஆகியோா் காணொலி மூலம் வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டனா். இதைத் தொடா்ந்து, பல்வேறு மாநிலங்களின் கலாசார கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில், தமிழகத்தில் உள்ள உத்தர பிரதேச சங்கத்தின் தலைவா் தினேஷ் பிரதாப் சிங், ஆளுநரின் முதன்மைச் செயலா் ஆா். கிா்லோஷ் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.