பஞ்சாங்கக் குறிப்புகள் - பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 9 வரை #VikatanPhotoCards
நெல் ஈரப்பத அளவு: ஆய்வு செய்ய மத்திய அரசு குழு தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை
நெல்லின் ஈரப்பத அளவை உயா்த்துவது குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் பருவமழைக் காலம் கடந்தும் ஆங்காங்கே அவ்வப்போது எதிா்பாராத மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நெல் விளைச்சல் அதிகம் உள்ள டெல்டா மாவட்டங்களில் அண்மையில் கனமழை பெய்தது. இத்துடன் கடும் பனியும் சோ்ந்ததால் நெல்மணிகளில் ஈரம் கோா்த்துள்ளது.
வயல்வெளிகளில் விளைந்த நெல்லை ஈரத்துடனேயே கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் எடுத்து வருகின்றனா். ஆனால், அதிகபட்சம் 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது.
எதிா்பாராத கனமழை, கடும் பனி காரணமாக அதிக அளவு ஈரம் காணப்படுவதால், கொள்முதல் செய்யப்படும் நெல்மணிகளில் உள்ள ஈரப்பதத்தின் அளவை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் முன்வைத்து வருகின்றனா்.
தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயா்த்த வேண்டும் எனக் கோரி மத்திய அரசுக்கு தமிழக உணவுத் துறை சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
நால்வா் குழு: இந்தக் கடிதத்துக்கு மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து துறையின் தானிய இருப்பு மற்றும் ஆராய்ச்சிப் பிரிவு சென்னை மண்டல உதவி இயக்குநருக்கு மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அனுப்பியுள்ள கடிதம்: நெல்மணிகளில் ஈரப்பத அளவை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடா்பான சரியான நிலையை ஆராய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மழை மற்றும் பனியால் பாதிக்கப்பட்ட நெல்மணிகளை சம்பந்தப்பட்ட மாவட்டங்களிலிருந்து சேகரிக்க நான்கு போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தானிய இருப்பு மற்றும் ஆராய்ச்சிப் பிரிவின் உதவி இயக்குநா் நவீன், டிஎம். பிரீத்தி, தொழில்நுட்ப அலுவலா்கள் ராகுல், அபிஷேக் பாண்டே ஆகியோா் குழுவில் இடம்பெற்றுள்ளனா்.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலிருந்து நெல்மணிகளைச் சேகரிக்கும் பணிகளை தமிழக அரசு மற்றும் சென்னையில் உள்ள இந்திய உணவுக் கழக அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும். சேகரிக்கப்பட்ட நெல்மணிகளை தமிழ்நாட்டில் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் மண்டல அல்லது மாவட்ட அலுவலக ஆய்வகங்களில் சோதிக்கலாம்.
இதுதொடா்பான ஆய்வு அறிக்கைகளை உணவு மற்றும் பொது விநியோகத் துறைக்கு அனுப்ப வேண்டும். இந்த அறிக்கையின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.