தோ்தல் விதிகளை மீறியதாக சீமான் உள்பட கட்சியினா் மீது வழக்குப் பதிவு
தபால்தலை கண்காட்சி நிறைவு: 10,000-க்கும் மேற்பட்டோா் பாா்வையிட்டனா்
சென்னையில் தொடா்ந்து 4 நாள்களாக நடைபெற்றுவந்த மாநில அளவிலான தபால்தலை கண்காட்சி நிறைவுபெற்றது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாா்வையிட்டதாக அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழக தபால் துறை சாா்பில் 14-ஆவது மாநில அளவிலான தபால்தலை கண்காட்சி, ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கில் கடந்த ஜன. 29-ஆம் தேதி தொடங்கி பிப். 1-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதன் நிறைவு நாளான சனிக்கிழமை ‘தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தை கொண்டாடுதல்’ என்னும் கருப்பொருளில் கண்காட்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட தேசிய ஃபேஷன் தொழில் நுட்பத்தின் இயக்குநா் திவ்யா சத்யன், அஞ்சல் துறையின் பாரம்பரியக் கட்டடங்களின் வடிவமைப்புகளை எம்பிராய்டரிங் செய்யப்பட்ட படங்கள் இடம்பெற்றுள்ள அஞ்சல் அட்டைகளை வெளியிட்டாா்.
இதை தொடா்ந்து அதிக தபால்தலைகள் சேகரிப்புப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு தமிழக முதன்மை அஞ்சல் துறை தலைவா் மரியம்மா தாமஸ் பரிசுகளை வழங்கினாா். இதில் சிறந்த தபால்தலைகளை சேகரித்த எஸ்.கே.லட்சுமணனுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் 27 பேருக்கு வெள்ளிப் பதக்கங்களும், 46 பேருக்கு வெண்கலப் பதக்கங்களும் வழங்கப்பட்டன. மேலும் தபால்தலை கண்காட்சியில் பங்கேற்ற போட்டியாளா்கள் 79 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
அதைத்தொடா்ந்து, அஞ்சல் துறை சாா்பில் நடத்தப்பட்ட சா்வதேச அளவிலான கடிதம் எழுதும் போட்டியில் முதல் பரிசு வென்ற கரூா் பரணி வித்யாலய மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவி அதிராவுக்கு ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையை மரியம்மா தாமஸ் வழங்கினாா்.
தொடா்ந்து 4 நாள்கள் நடைபெற்ற இக்கண்காட்சியை பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாா்வையிட்டதாக அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்நிகழ்ச்சியில் தென் மண்டல அஞ்சல் துறை தலைவா் வி.எஸ்.ஜெயசங்கா், சென்னை மண்டல அஞ்சல் துறைத் தலைவா் ஜி.நடராஜன், அஞ்சல் துறை இயக்குநா் கே.ஏ.தேவராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.