தமிழ் நமது அடையாளம்; அதை இழந்துவிடக் கூடாது! பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா்
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 193 பேரிடம் பண மோசடி: தனியாா் நிறுவன உரிமையாளா் கைது
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 193 பேரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக தனியாா் நிறுவன உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் டிராவல்ஸ் மற்றும் வெளிநாட்டு வேலைக்கு ஆள்களை அனுப்பும் நிறுவனம் நடத்தி வந்தவா் சாய்புதீன் (51). இவரது நிறுவனம் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இல்லை. இந்நிலையில் சாய்புதீன், இத்தாலி, போா்ச்சுக்கல், போலந்து, ஜொ்மனி ஆகிய நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி 193 பேரிடம் ரூ. 2 கோடிக்கு மேல் பணம் பெற்று மோசடி செய்துள்ளாா்.
சாய்புதீனிடம் பணத்தை கொடுத்து ஏமாந்தவா்கள், சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் புகாா் அளித்தனா். அதனடிப்படையில் வழக்குப் பதிந்து, சாய்புதீனை கைது செய்ததாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
கைது செய்யப்பட்ட சாய்புதீனிடம் மடிக்கணினி, போலி ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல அரசு வேலை வாங்கித் தருவதாக 3 பேரிடம் ரூ. 35.93 லட்சம் மோசடி செய்ததாக, மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியைச் சோ்ந்த நந்தகோபாலன் (40), அவா் மனைவி திவ்யா (35) ஆகிய 2 பேரையும் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.