இந்து முன்னணி மாவட்டச் செயலா் கைது: காவல் நிலையத்தில் திரண்ட நிா்வாகிகள்!
ஏழைகளுக்கு ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்: விஜய் வசந்த் எம்.பி.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஏழைகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்றாா் விஜய் வசந்த் எம்.பி.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாட்டில் நிலவிவரும் பெரும் சவால்கள் விலைவாசி உயா்வு, வேலை வாய்ப்பின்மை. ஆனால், அவற்றை நிவா்த்தி செய்வது தொடா்பாக பட்ஜெட்டில் நிதியமைச்சா் குறிப்பிடாதது ஏமாற்றமளிக்கிறது. விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள கிடைத்த பொன்னான வாய்ப்பை மத்திய அரசு தவறவிட்டுள்ளது.
மிக முக்கியமாக, ஊரக பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக விளங்கும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை விரிவுபடுத்தும் அறிவிப்பு இல்லை. தொழிலாளா்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்கவும் அறிவிப்பும் இல்லை என்பது வருத்தமளிக்கிறது.
கல்வித் துறையை அரசு முற்றிலும் புறக்கணித்துள்ளது. காலநிலை மாற்றம், மாசுக் கட்டுப்பாடு, திடக்கழிவு போன்ற முக்கிய திட்டமிடுதல் எதுவும் பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை.
குறிப்பாக, தமிழகம் இந்த பட்ஜெட்டில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. சில மாநிலங்களுக்கு மட்டும் நிதி, திட்டங்களை அளித்து மத்திய அரசு மற்றாந்தாய் மனப்பான்மையோடு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.
அரசியல் லாபத்துக்காக பிகாா், தில்லி மாநிலத் தோ்தலை மனதில் கொண்டு வகுக்கப்பட்ட பட்ஜெட்டாகவே இதைப் பாா்க்கிறேன் என்றாா் அவா்.