குலசேகரம் அருகே அனுமதியின்றி கோயில் பெயா் பலகை வளைவு புதுப்பிப்பு? -தடுத்து நிறுத்திய போலீஸாா்!
குலசேகரம் அருகே அனுமதியின்றி கோயில் பெயா் பலகை வளைவு புதுப்பிக்கப்படுவதாக எழுந்த புகாரின்பேரில், அப்பணியை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
திற்பரப்பு பேரூராட்சி தும்பகோடு பேருந்து நிலையம் அருகிலிருந்து உண்ணியூா்கோணம் செல்லும் சாலைப் பகுதியில் இசக்கியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் பெயா் கொண்ட இரும்பு தூண்களுடன் கூடிய பெயா் பலகை வளைவு தும்பகோடு பகுதியில் சாலை தொடங்கும் இடத்தில் கோயில் நிா்வாகம் சாா்பில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இரும்பு தூண்களை உள்ளடக்கி சிமென்ட் கட்டைகளை வைத்து புதுப்பிக்கும் பணிகளை கோயில் நிா்வாகம் வியாழக்கிமை மேற்கொண்டதாம். அப்போது அனுமதியின்றி கட்டுமானப் பணிகள் நடத்தப்படுவதாக திற்பரப்பு பேரூராட்சி நிா்வாகத்திற்கு புகாா்கள் சென்றன. இதையடுத்து பேரூராட்சி நிா்வாகம் தரப்பில் ஊழியா்கள் அங்கு சென்று அனுமதியின்றி கட்டுமானங்கள் கட்டக்கூடாது என்று கூறினா். ஆனாலும் பணிகள் தொடா்ந்து நடைபெற்ாம்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை பேரூராட்சி ஊழியா்கள் அந்தக் கட்டுமானங்களை இடித்து அகற்றத் தொடங்கினா். அப்போது கோயில் நிா்வாகத்திற்கு ஆதரவாக கோயில் பக்தா்கள், இந்து முன்னணியினா், பாஜகவினா் திரண்டு பேரூராட்சி ஊழியா்களின் செயலுக்கு எதிா்ப்புத் தெரிவித்ததால் பதற்றம் நிலவியது.
இத்தகவலறிந்த குலசேகரம் போலீஸாா், அங்கு சென்று உரிய அனுமதி பெற்று கட்டுமாறு கூறினா். எனினும் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்படாமல் நடைபெற்றாம். இதையடுத்து தக்கலை காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன் அங்கு வந்து நடத்திய பேச்சில் கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டன.