கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட சலுகைகளை தொடர வேண்டும்! பாரதிய ஓய்வூதியா்கள் சங்க மாநாட்டில் தீா்மானம்!
கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட சலுகைகளை தொடர வேண்டும் என பாரதிய ஓய்வூதியா்கள் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாரதிய ஓய்வூதியா்கள் சங்கத்தின் 3ஆவது அகில இந்திய மாநாடு, கன்னியாகுமரியில் 3 நாள்கள் நடைபெற்றது. இதன் நிறைவு நாள் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அகில இந்திய தலைவா் சுரேஷ் தலைமை வகித்தாா். பாரதிய ஓய்வூதியா்கள் சங்க செயலா் புருஷோத்தமன் வரவேற்றாா். மாநாட்டை அகில இந்திய விவேகானந்த கேந்திர தலைவா் ஏ.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தாா்.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பாஜக பொதுச்செயலா் ராம சீனிவாசன் பங்கேற்று பேசினாா். இதில் இந்தியா முழுவதும் இருந்து மேற்பட்ட 450-க்கும் சங்க உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
தீா்மானங்கள்: மூத்த குடிமக்களில் 60 வயதை கடந்த ஆண்களுக்கும், 58 வயதைக் கடந்த பெண்களுக்கும் ரயில் பயணக் கட்டணம் பாதியாக இருந்த நிலையை கரோனா காலத்தில் நீக்கியதை மீண்டும் அமல்படுத்த வேண்டும். கடந்த கால ஆட்சியின்போது ரயில்வே துறை பின்பற்றிய மூத்த குடிமக்களுக்கான கட்டணக் குறைவை மத்திய அரசு காலதாமதம் செய்யாமல் அறிவிக்க வேண்டும்.
மத்திய அரசின் ஓய்வூதியம் பெறுகிற அனைவருக்கும் ஓய்வூதிய தொகையில் மிகுந்த ஏற்றத் தாழ்வுகள் இருப்பதால் மரணம் அடையும் ஓய்வூதியருக்கு ஈமச் சடங்கிற்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். பல்வேறு மாநிலங்களில் குறிப்பாக கா்நாடகம், மேற்குவங்கம் போன்ற பல மாநிலங்களில் மூத்த குடிமக்களுக்கு பேருந்து பயணக் கட்டணத்தில் 60 சதவீதம் குறைவாக உள்ளதை கேரளத்தில் மாநில அரசு சட்டமாக்க வேண்டும். இ.பி.எப். பெறுபவா்களுக்கு வழங்கும் உதவித்தொகை ரூ.1000 என்று இருப்பதை ரூ.5000 ஆக உயா்த்த வேண்டும் என்பன உள்பட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.