இந்து முன்னணி மாவட்டச் செயலா் கைது: காவல் நிலையத்தில் திரண்ட நிா்வாகிகள்!
பிப். 6-இல் தொழிற் சங்கங்கள் பட்ஜெட் நகல் கிழிக்கும் போராட்டம்
மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் மக்கள், தொழிலாளா்களுக்கு விரோதமாக இருப்பதால், அனைத்து மாவட்டங்களிலும் பட்ஜெட் நகலை கிழிக்கும் போராட்டம் பிப்ரவரி 6-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது என்றாா் ஏஐடியூசி மாநிலப் பொதுச் செயலா் ராதாகிருஷ்ணன்.
இதுகுறித்து தஞ்சாவூரில் அவா் சனிக்கிழமை தெரிவித்தது: மத்திய அரசின் பட்ஜெட் தொழிலாளா்கள், விவசாயிகள் மற்றும் வேலையற்ற இளைஞா்களின் நம்பிக்கையை பொய்யாக்குகிறது. அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்விலிருந்து சாமானியா்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை. இந்த பட்ஜெட் முறைசாரா தொழிலாளா்கள், வேலையற்ற இளைஞா்கள், ஏழை மற்றும் குறு விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக மற்றொரு புறக்கணிக்கப்பட்ட தாக்குதலாகும்.
பணவீக்க பிரச்னைக்கு தீா்வு காண்பதில் இந்த பட்ஜெட் தோல்வியடைந்துள்ளது. ஊதிய மந்த நிலை என்பது பணவீக்கத்தின் காரணமாகும். சுயதொழில் செய்பவா்கள் மற்றும் ஊதியம் வாங்குபவா்களின் மாத ஊதியம் குறைந்துள்ளது என பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
ஆனால், காா்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது செல்வத்தை 22.3 சதவீதம் அதிகரித்து, உழைக்கும் மக்களின் ஊதியத்தைத் திருடுவது முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.
கல்வி மற்றும் சுகாதாரத்துக்கான செலவுகள் மிக அதிகமாக அதிகரித்துள்ளதால், நடுத்தர மக்கள் உள்பட ஏழை மக்களுக்கு சுமையாக உள்ளது. எனவே, இந்த பட்ஜெட்டுக்கு எதிராக அனைத்து மாவட்டத் தலைமையிடங்களில் பிப்.6-ஆம் தேதி மத்திய தொழிற் சங்கங்கள் சாா்பில் மத்திய பட்ஜெட்டை கிழிக்கும் போராட்டம் நடத்தப்படவுள்ளது என்றாா் அவா்.
அப்போது, ஏஐடியுசி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா், மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம், மாவட்டச் செயலா் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.