Baba Ramdev: மீண்டும் சிக்கலில் பாபா ராம்தேவ்; கைது வாரண்ட் பிறப்பித்த கேரள நீதிமன்றம்!
பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவின் மருந்துப் பொருள்களின் விளம்பரங்களில் தவறான தகவல்கள் இடம்பெறுவதாகவும், அதைத் தடை செய்யக் கோரியும் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் கூட இந்த நிறுவனத்தின் மீது வழக்கு நடந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாபா ராம்தேவ் உள்ளிட்ட இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. ஆனால், பாபா ராம்தேவ் ஆஜராகவில்லை. இதனால் கோபமடைந்த உச்ச நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக குறிப்பிட்டது.
உடனே பாபா ராம்தேவ் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம், "விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக் கூடாது. பதஞ்சலி நிறுவனத்தின் பொய்யான மற்றும் தவறான விளம்பரங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். போலி விளம்பரம் தொடர்பாக செய்தித் தாள்களிலும் மன்னிப்பு கோரும் அறிவிப்பை வெளியிட வேண்டும்" என உத்தரவிட்டு, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கை முடித்துவைத்தது.
அதேபோல, கேரளாவில் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் துணை நிறுவனமான திவ்யா பார்மசி வெளியிட்ட விளம்பரங்கள், மருந்துகள் மற்றும் மந்திர வைத்தியம் (ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள்) சட்டம் 1954-ன் விதிகளை மீறியதாகவும், அலோபதி உள்ளிட்ட நவீன மருத்துவத்தை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வெளியிட்டதாகவும், நோய்களைக் குணப்படுத்துவதாக ஆதாரமற்ற கூற்றுக்களை வெளியிட்டதாகவும் கேரளம் முழுவதும் பல குற்றவியல் வழக்குகள் திவ்யா பார்மசி மீது தொடரப்பட்டன.
பாலக்காடு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்துவரும் நிலையில், பாபா ராம்தேவ் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. ஆனால், அவர் நேரில் ஆஜராகவில்லை. அதனால், பிணையில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்து கேரள நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருக்கிறது.