``கல்வித்துறையில் அரசு வேலை..'' 34 பேரிடம் ரூ 1.11 கோடி வசூல் -2 பெண்கள் கைது!
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்தவர் பொறியாளர் சுந்தரவிக்னேஷ். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கல்வித்துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக தான் உள்பட 33 பேரிடம் 1.11 கோடி ரூபாயை வாங்கி கொண்டு ஒரு பெண் மோசடி செய்ததாக மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகாரில், "என் சகோதரி திவ்யா, அவரின் தோழி செல்வராதா இருவரும் தனியார் பள்ளியில் ஆசிரியர்களாக வேலை செய்து வந்தனர். அவர்களிடம் பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த கனகதுர்கா என்பவர் கல்வித்துறையில் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறேன் எனக் கூறி அறிமுகமாகி உள்ளார். மேலும் திவ்யாவுக்கு அரசு ஆசிரியர் பணியும், செல்வராதாவுக்கு அரசுக் கணினி ஆய்வாளர் வேலையும் வாங்கி தருகிறேன். உங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் வேறு யாருக்கும் வேலை வேண்டும் என்றாலும் கூறுங்கள் என ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்.
இதை நம்பியை இருவரும் தங்களுடன் வேலை பார்ப்பவர்களிடம் வேலை வாய்ப்புக் குறித்து கூறியுள்ளனர். இதற்கிடையே கனகதுர்காவின் வங்கிக் கணக்கில் வேலைக்காக 33 லட்ச ரூபாயை செலுத்தியிருந்தனர். இதேபோல கனகதுர்காவுடன் சேர்ந்து இ.புதுப்பட்டியைச் சேர்ந்த சூர்யா, கம்பம் வடக்குபட்டியைச் சேர்ந்த சரண்யா ஆகியோரும் கல்வித்துறையில் வேலை வாங்கித் தருவதாக 26 பேர் 78.21 லட்சம் என மொத்தம் 1 கோடியே 11 லட்ச ரூபாயை பெற்றுக் கொண்டு காலதாமதம் செய்து வந்துள்ளனர். ஒரு கட்டத்திற்கு பிறகு கனகதுர்கா குறித்து விசாரித்தபோது அவர் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது தெரியவந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மோசடி செய்த 3 பெண்கள் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கனகதுர்காவை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய சரண்யா ஏற்கெனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் மோசடி வழக்கில் கைதாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.