ஐசிசி தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா 2-வது இடத்துக்கு முன்னேற்றம்!
ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையை அண்மையில் ஐசிசி வெளியிட்டது. அயர்லாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஸ்மிருதி மந்தனா பேட்டிங்கில் ஒரு இடம் முன்னேறி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இதையும் படிக்க: மகளிர் உலகக் கோப்பை: 3 ஓவருக்குள் மலேசியாவை வீழ்த்தி இந்தியா அபாரம்!
அயர்லாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஸ்மிருதி மந்தனா 41 மற்றும் 73 ரன்கள் எடுத்தார். மூன்றாவது போட்டியில் ஸ்மிருதி மந்தனா சதம் விளாசி அசத்தினார். அவர் அந்தப் போட்டியில் 135 ரன்கள் எடுத்தார். பேட்டிங் தரவரிசையில் முதல் 10 இடங்களில் இந்திய வீராங்கனைகளில் ஸ்மிருதி மந்தனா ஒருவர் மட்டுமே இடம்பெற்றுள்ளார்.
தென்னாப்பிரிக்க வீராங்கனை லாரா வோல்வர்ட் முதலிடத்திலும், இலங்கையின் சமாரி அத்தப்பட்டு மூன்றாவது இடத்திலும் உள்ளனர். ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்த இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், இரண்டு இடங்கள் முன்னேறி 17-வது இடத்தில் உள்ளார். அயர்லாந்துக்கு எதிரான தொடரில் விளையாடாத இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 15-வது இடத்தில் உள்ளார்.
இதையும் படிக்க: இந்திய அணிக்காக விளையாட எந்தவொரு காயத்திலிருந்தும் மீண்டு வரலாம்: முகமது ஷமி
பந்துவீச்சை பொருத்தவரையில், இந்திய வீராங்கனை தீப்தி சர்மா ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தில் உள்ளார். இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்கல்ஸ்டோன் முதலிடத்தில் நீடிக்கிறார்.