எதிர்கால முதல்வர் நீங்கள்தான்! -அமைச்சர் கைகாட்டிய நபர் யார்?
ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் நர லோகேஷ் ஆந்திர பிரதேசத்தின் முதல்வராவார் என்று பேசியுள்ளார் அம்மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர் டி. ஜி. பரத்.
ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனான நர லோகேஷ், முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அமைச்சர் டி. ஜி. பரத். பேசியிருக்கும் கருத்து ஆந்திர அரசியலில் சற்று அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார சம்மேளனத்தின் வருடாந்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் அவருடைய மகன் லோகேஷ் உள்பட அமைச்சர்கள் பலர் வருகை தந்திருந்தனர்.
இந்த நிலையில், ஸுரிச் நகரில் திங்கள்கிழமை(ஜன. 20) நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைவரது முன்னிலையிலும் அமைச்சர் லோகேஷை புகழ்ந்து பேசிய அமைச்சர் டி. ஜி. பரத், “சிலருக்கு பிடிக்கிறதோ இல்லையோ, லோகேஷ்தான் எதிர்கால தலைவர். அவர் முதல்வராகவும் மாறுவார்.
ஆந்திரத்தின் 175 எம். எல்.ஏ.க்கள் மற்றும் 25 எம்.பி.க்களில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள் லோகேஷை தவிர்த்து எவருமில்லை” என்றார்.
இதனிடையே முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசுகையில் “2047-இல் தெலுங்கு சமூகம்தான் நம்பர்-1 ஆக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திர துணை முதல்வராக ஜனசேனை கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் உள்ளார். இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சியினருக்கு, அவர் மீது அதிருப்தி நிலவி வருவதை கள நிலவரங்கள் பிரதிபலிக்கின்றன.
இதனையடுத்து, அவருக்கு இணையான தலைவராக, தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செயலரான அமைச்சர் லோகஷுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டுமென்று பேசி வருகின்றனர்.
இந்த நிலையில், லோகேஷ துணை முதல்வராக்க வேண்டுமென்ற கருத்தை பொது வெளியில் எவரும் தெரிவிக்கவோ முன்னிலைப்படுத்தவோ கூடாதென தெலுங்கு தேசம் கட்சி அறிவுறுத்தியுள்ள நிலையில், அமைச்சரின் இந்த கருத்து அக்கட்சியினருக்கே அதிர்ச்சி வைத்தியமாக அமைந்துவிட்டது.
இவ்விவகாரத்தால் ஆளும் கூட்டணியில் விரிசல் விழக் கூடாதென கவனமாகக் காய் நகர்த்தி வரும் சந்திரபாபு நாயுடு, கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜனசேனையுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கவிருப்பதாக தெலுங்கு தேசம் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.