டாஸ்மாக்கை விட கோமியம் கெடுதலில்லை: தமிழிசை சௌந்தரராஜன்
மாட்டின் கோமியம் டாஸ்மாக்கை விட கெடுதலில்லை என்றும் கோமியத்தில் மருத்துவ குணங்கள் உள்ளன என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளார்.
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) இயக்குநர் காமகோடி இரு நாள்களுக்கு முன்பு ஒரு விழாவில், ”கோமியம் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு கொண்டது. வயிற்றுக் கோளாறு உள்ளிட்ட பல நோய்களுக்கு கோமியம் மருந்தாகப் பயன்படுகிறது. அதனை நாம் எடுத்துக்கொள்ளவேண்டும்” எனப் பேசியிருந்தார்.
காமகோடி பேசியது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “ஆராய்ச்சிப் பூர்வமாக கோமியத்தில் நுண்ணுயிர்களைத் தடுக்கும் சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் தான் அதை வீட்டின் முன்பு தெளிப்பார்கள். மாட்டின் சிறுநீரான கோமியம் ஆயுர்வேதத்தில் மருந்து என எழுதப்பட்டுள்ளது. அதை, அமிர்த நீர் என்று குறிப்பிடுகிறார்கள்.
இதையும் படிக்க | வள்ளுவர், வள்ளலாரை களவாட ஒரு கூட்டமே சதி செய்கிறது: முதல்வர் ஸ்டாலின்
நம் தமிழ்நாட்டில் உள்ள சங்க இலக்கியத்தில் மாட்டுச் சாணம் பூசிய முற்றங்கள் குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறதா இல்லையா? மாட்டுச் சாணத்தில் கிருமிநாசினி இருக்கிறதென்றால், மாட்டின் சிறுநீரிலும் கிருமிநாசினி இருக்கும்தான். இதில், எல்லா மிருகங்களையும் சொல்லவில்லை” என்றார்.
மேலும் பேசிய அவர், “மியான்மர், ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலும் மாட்டின் சிறுநீரகத்தைப் பயன்படுத்துகிறார்கள். ஒட்டுமொத்தமாக புறந்தள்ள முடியாது. இது ஆய்வுப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
50 வகையான காய்ச்சல்களுக்கு கோமியம் மருந்தாக ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதில், அவர் (காமகோடி) சொன்ன காய்ச்சலும் ஒரு வகையாக இருந்திருக்கலாமே.
அறிவுப்பூர்வமாக, விஞ்ஞானப்பூர்வமாக ஒரு தொழில்நுட்பக் கல்லூரியை தலைமை தாங்குபவர் சும்மா எதையேனும் சொல்வாரா?
இதையும் படிக்க | கதிர் ஆனந்த் கல்லூரியில் சோதனை! ரூ. 13.7 கோடி ஆவணங்கள் பறிமுதல்!
என் உணவு, என் உரிமை என்று நீங்கள் பேசுகிறீர்கள். ஒரு இடத்தில் மாட்டிறைச்சியை அலுவலகத்தில் தூக்கி வீசுகிறீர்கள். ஆனால், விஞ்ஞானப் பூர்வமாக கோமியத்தை மருந்து எனச் சொல்லும்போது ஏன் அதை ஒத்துக்கொள்ள மறுக்கிறீர்கள்.
நான் அலோபதி மருத்துவம் படித்த மருத்துவர். ஆனால், ஆயுர்வேதத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
மாட்டுக்கறியை சாப்பிடுவார்களாம். ஆனால், மருந்தாக உட்கொள்ள விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட மாட்டின் சிறுநீரை பற்றிப் பேசினால் அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.
வேங்கைவயலில் குடிக்கும் தண்ணீர்ல் மலம் கலந்தால் அது உங்களுக்கு குற்றமில்லை. ஆனால், மாட்டின் கோமியம் குறித்துச் சொன்னால் நீங்கள் குதிக்கிறீர்கள்.
இவர்களுக்கு கோமியம் குடிப்பது பிரச்னையில்லை. டாஸ்மாக் வியாபாரம் குறையுமென்று பயம். டாஸ்மாக்கை விட கோமியம் கெடுதலில்லை” என்று தெரிவித்தார்.