செய்திகள் :

உரிமைகளைக் காக்க ஓரணியில் திரண்டு நிற்க வேண்டியது கட்டாயம்! - அமைச்சர் கோவி.செழியன்

post image

யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக தமிழகத்தைத் தொடர்ந்து கேரள சட்டப்பேரவையிலும் இன்று(செவ்வாய்க்கிழமை) தீர்மானம் நிறைவேற்றியதையடுத்து மாநில உரிமைகளைக் காக்க நாம் ஓரணியில் திரண்டு நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார்.

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும்வகையில் யுஜிசி வெளியிட்ட புதிய விதிமுறைகளுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

யுஜிசியின் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் ஜன. 9 அன்று சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், யுஜிசியின் புதிய வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தி முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நேற்று(ஜன. 20) கடிதம் எழுதினார். தொடர்ந்து நாட்டில் பாஜக அல்லாத ஆளும் மாநில முதல்வர்களுக்கும் இதுகுறித்து கடிதம் எழுதினார்.

இந்நிலையில், யுஜிசியின் புதிய விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் இன்று(ஜன. 21) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | யுஜிசி புதிய விதிகள்: கேரள சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றம்!

இதையடுத்து, மாநில உரிமைகளைக் காக்க நாம் ஓரணியில் திரண்டு நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

மக்களாட்சியையும் மாநிலங்களின் கல்வி சுயாட்சியையும் சிதைக்க நினைக்கும் மத்திய பாஜக அரசிற்கு எதிராக ஒன்றாக நின்று போராட வேண்டிய நேரமிது. மாநில அரசு இதுவரை உருவாக்கி வளர்த்து வைத்துள்ள பல்கலைக்கழகங்களை எல்லாம் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு (UGC) வாயிலாகக் கைப்பற்றி, நமது கல்வி வளர்ச்சியைத் தடுக்க முயல்கிறது மோடி அரசு.

‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு உருவாக்கிய பல்கலைக்கழகங்கள் மீது மாநில அரசுக்கே எந்த உரிமையையும் கிடையாது’ எனக் கூறுவது சர்வாதிகார ஆணவம் அன்றி வேறென்ன? மாநில அரசுகளை மிரட்டிப்பார்க்கும் ஆதிக்க நடவடிக்கை இது.

கல்வி சார்ந்த உரிமைகள் அரசியலமைப்பின் ஒத்திசைவுப் பட்டியலில் (Concurrent) உள்ளபோது மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக யுஜிசி அறிவிப்பை வெளியிட்டிருப்பது, அதன் அதிகார வரம்பை மீறிய அத்துமீறல் நடவடிக்கை. கல்வி சார்ந்த வழிகாட்டிகளை வழங்கக் கூடிய யுஜிசி, மத்திய அரசின் கைப்பாவையாக மாறியிருக்கிறது.

மத்திய அரசின் யுஜிசி விதிகளை ஏற்காவிட்டால், மாணவர்கள் கஷ்டப்பட்டுப் படித்து வாங்கும் பட்டங்கள் செல்லாது; யுஜிசி திட்டங்களில் பங்கேற்க முடியாது; பல்கலைக்கழகங்களின் சட்ட அங்கீகாரம் செல்லாது என்றெல்லாம் யுஜிசி அறிவித்திருப்பது நேரடியாக தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி மீது தொடுக்கப்பட்ட போர்.

மோடி அரசின் உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட வேண்டும் என மிரட்டியபோது முந்தைய அதிமுக அரசு கையெழுத்திட்டது. அதன் விளைவுகளை இப்பொழுது சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திடாவிட்டால் நிதி தரமாட்டோம் என விதிகளை வகுக்கிறார்கள்.

இந்த மிரட்டல் உருட்டல்களுக்கெல்லாம் ஒருநாளும் திமுக அரசு அஞ்சாது! பழைய வரலாறுகளைப் புரட்டிப் பார்ப்பவர்களுக்கு இது தெரியும்.

துணை வேந்தர் நியமனத்தில் மாநில அரசின் உரிமையை மறுப்பதோடு கல்வியாளர் அல்லாதவர்களைத் துணை வேந்தர்களாக நியமிக்கலாம் என்றும் தனது அடிப்படை கல்வித் தகுதியிலிருந்து மாறுபட்ட பாடத்தில் முனைவர் பட்டமோ அல்லது நெட்/செட் தகுதி பெற்றவர்களோ பேராசியர்கள் ஆகலாம் என யுஜிசி வரைவறிக்கை தெரிவித்திருப்பது கல்வித் துறையைச் சீரழித்து மாணவர்களின் கல்விக் கனவைப் பாழாக்கிவிடும்.

இதன் ஆபத்தை உணர்ந்துதான் முதல்வர் ஸ்டாலின் இந்த வரைவறிக்கைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். மத்திய கல்வித் துறை அமைச்சருக்குக் கடிதமும் எழுதினார்.

மத்திய பாஜக அரசின் இந்த செயல் தமிழ்நாட்டின் கல்வி மீது தொடுத்திருக்கும் தாக்குதல் மட்டுமல்ல, தனித்துவமான இந்திய மாநிலங்கள் அனைத்தின் மீதான தாக்குதல். அதனால்தான் நமது முதல்வர், "பாஜக அல்லாத மாநில முதல்வர்கள் தமிழகத்துடன் இணைந்து இந்த அடக்குமுறை நடவடிக்கைகளை நிராகரித்து சட்டமன்றத்தில் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். மாநிலங்கள் ஒன்றிணைந்து, நமது கல்வி நிறுவனங்களின் மீதான மாநில உரிமையை மீட்டெடுக்க வேண்டும்" என்று கடிதம் வாயிலாக கேட்டுக்கொண்டார்.

அதன்படியே இன்று கேரள அரசும் யுஜிசி வரைவறிக்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அனைத்து மாநிலங்களும் மாநில உரிமைகளை காக்க ஓரணியில் திரண்டு நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

விஷச் செடியையும், விஷமச் செயலையும் முளையிலேயே கிள்ளி எறிதல் அவசியம். அப்படியே மோடி அரசிற்கு உட்பட்ட யுஜிசி-யின் இந்த சர்வாதிகார செயலையும் நாம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

மாநில அரசுகளின் அதிகாரத்தை நீக்கி கூட்டாட்சிக்குக் குழி பறிக்கும் யுஜிசி வெளியிட்ட வரைவு அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதனைத் திரும்பப் பெறும் வரை திமுக அரசும், தமிழ்நாட்டு மக்களும் தங்களது எதிர்ப்பில் இருந்து ஒரு நொடியும் பின்வாங்கமாட்டார்கள்.

மாநில உரிமைகளைப் பறிக்க நினைக்கும் மோடி அரசிற்கு எதிராக ஒன்றுபடுவோம். மீட்டெடுப்போம் நமது கல்வி உரிமையை... நிலைநாட்டுவோம் மாநில சுயாட்சியை!

தமிழிசைக்கு மாமிசத்துக்கும், கழிவுக்கும் வித்தியாசம் தெரியாதது கொடுமை: செல்வப்பெருந்தகை

ஆங்கிலத்தில் மருத்துவம் பயின்ற தமிழிசை செளந்தரராஜனுக்கு மாமிசத்துக்கும் கழிவுக்கும் வித்தியாசம் தெரியாதது மிகப்பெரிய கொடுமை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.கோமி... மேலும் பார்க்க

டாஸ்மாக்கை விட கோமியம் கெடுதலில்லை: தமிழிசை சௌந்தரராஜன்

மாட்டின் கோமியம் டாஸ்மாக்கை விட கெடுதலில்லை என்றும் கோமியத்தில் மருத்துவ குணங்கள் உள்ளன என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளார். சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி... மேலும் பார்க்க

போலீஸ் காவல்: ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஞானசேகர... மேலும் பார்க்க

மழையால் அதிக ஈரப்பதமான நெற்பயிர்கள்: மத்தியக் குழு தமிழகம் வருகை!

வடகிழக்கு பருவமழையால் டெல்டா மாவட்டங்களில் அதிக ஈரப்பதமான நெற்பயிர்களை ஆய்வு செய்ய மத்திய அதிகாரிகள் குழு தமிழகம் வரவுள்ளது.தமிழ்நாட்டில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழையால் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில்... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் கொலை வழக்கு - கல் குவாரிகளில் டிரோன் மூலம் ஆய்வு!

புதுக்கோட்டையில் கனிம வளக் கொள்ளைக்கு எதிராகச் செயல்பட்டு வந்த சமூக ஆா்வலா் ஜகபா் அலி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை வாா்டு முன்னாள் உறுப்பினரான அதிமுகவை சோ்ந்த... மேலும் பார்க்க

முன்னாள் காதலியை கொலை செய்ய கூலிப்படையுடன் தங்கியிருந்த காதலன் கைது!

கரூர் : கரூரில் முன்னாள் காதலியை கொலை செய்ய கூலிப்படையினருடன் தங்கும் விடுதியில் பதுங்கியிருந்த முன்னாள் காதலன் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், வையம்பட்டி பகுதியைச் சேர்ந்... மேலும் பார்க்க