``5 உயிர்களை காப்பாற்றி இருக்கிறார்'' -உறுப்புகள் தானம் செய்த பெண்ணுக்கு அரசு மரியாதையுடன் அடக்கம்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது: 66). இவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவரது மனைவி சோமவள்ளி என்கின்ற பாப்பாத்தி (வயது: 49). கடந்த வாரம் சோமவள்ளி சென்னையில் வசிக்கும் தனது மகள், மருமகன் (திவ்யா- கார்த்திக்) ஆகியோரை சந்திக்க சென்றுள்ளார். அங்கு பைக்கில் செல்லும்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சோமவள்ளி தலையில் அடிபட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்த அவரது மகள், மருமகன் ஆகியோர் சோமவள்ளியின் உடல் உறுப்புகளை தானம் கொடுக்க முன்வந்து மருத்துவரிடம் தெரிவித்துள்ளனர். இதனால், சென்னையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த தாகூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோமவள்ளியின் உடலில் இருந்து இதயம், கிட்னி, கல்லீரல் போன்ற உறுப்புகள் அறுவை சிகிச்சை செய்து பாதுகாப்பாக எடுக்கப்பட்டன.
மேலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு சார்பில் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட சோமவள்ளியின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு, அதன்பிறகு சோமவள்ளியின் உடல் அவரது சொந்த ஊரான கரூர் மாவட்டத்தில் உள்ள பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையில், கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கிருஷ்ணராயபுரம் தாசில்தார் பிரபாகர், அவர்கள் வீட்டிற்கு நேரில் சென்று அரசு சார்பில் சோமவள்ளி உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், அவரது கணவர் மற்றும் மகளிடம், ’சோமவள்ளி இறந்த பிறகும் ஐந்து நபர்களின் உயிர்களை காப்பாற்றி இருக்கிறார்.
அந்த மனசு உங்கள் அனைவருக்கும் வாய்த்ததில், கரூர் மாவட்டமே பெருமைகொள்கிறது’ என்று கூறி ஆறுதல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, அவர்களது வழக்கத்தின்படி சோமவள்ளியின் உடல் தகனம் செய்யப்பட்டது. மகள் வீட்டுக்குச் சென்னைக்கு சென்ற பெண் விபத்தில் இறக்க, அவரது உடல் உறுப்புகளை அவரது உறவினர்கள் தாமாக முன்வந்து தானம் கொடுத்துள்ளது, நெகிழ்வை ஏற்படுத்தியிருக்கிறது.