செய்திகள் :

`இன்னும் இன்னும் நல்லா இரு தங்கம்'- தமிழ்நாடே பதறிப்போன விபத்து; தன்யஸ்ரீ எப்படியிருக்கிறாள்?

post image
தண்டையார்பேட்டையில் 2018-ம் வருடம் ஜனவரி மாதம் நடந்த அந்த சம்பவம் ஒருவருடைய குடிப்பழக்கம் அவருக்கு சம்பந்தமே இல்லாத ஒரு குழந்தையின் வாழ்க்கையில் எத்தகைய பயங்கரத்தை ஏற்படுத்தும் என்று மொத்த தமிழ்நாட்டுக்கும் தலையில் அடித்ததுபோல் புரிய வைத்தது. அப்படி என்ன சம்பவம் என்று யோசிப்பவர்களுக்கு அந்த சம்பவம் குறித்த சிறு விளக்கம்.

அந்தப் பெருந்துயரம்:

2018-ம் வருடம் ஜனவரி மாதத்தின் ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு. குடும்பத்துடன் அனைவரும் சாப்பிட்டு முடித்திருக்கிறார்கள். சற்று காலாற நடந்து வர வெளியே சென்ற தன் தாத்தாவுடன், நானும் வருவேன் என்று அடம்பிடித்துக் கிளம்பியிருக்கிறாள் ஐந்து வயது தன்யஸ்ரீ. தாத்தாவும் பேத்தியும் நடந்து சென்று கொண்டிருக்கும்போது ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குடிபோதை மயக்கத்தில் கீழே குதித்து இருக்கிறார் ஒரு நபர். கண் மண் தெரியாத குடி மயக்கத்தில் தற்கொலை செய்துகொள்ள அவர் கீழே குதிக்க, அவர் விழுந்தது குழந்தை தன்யஸ்ரீ மீது. என்ன நடந்தது என்று தெரிவதற்கு முன் குழந்தை தரையோடு தரையாகக் கிடந்தாள். பதறி அடித்துக்கொண்டு குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அந்தச் சின்ன உயிர் சில வாரங்கள் கோமாவில் இருந்தது. மருத்துவர்கள், நண்பர்கள், ஏரியாவாசிகள், காவல்துறையினர், ஊடகங்கள், அரசாங்கம் என எல்லோரும் பணஉதவி செய்ய, மொத்த தமிழ்நாடும் தன்யஸ்ரீக்காக பிரார்த்தனை செய்தது. அடுத்த சில வாரங்களில் உடைந்த காலில் மாவுக்கட்டு, முன் மண்டை ஓடு நீக்கப்பட்ட தலையில் பெரிய பேண்டேஜ் என மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த தன்யஸ்ரீ, சில மாதங்களில் பழைய நிலைக்குத் திரும்பினாள். நீக்கப்பட்ட மண்டை ஓட்டை வைத்து திரும்பவும் வைத்து அறுவை சிகிச்சை செய்த பிறகு குழந்தை ஆரோக்கியமாக இருந்தாள்.

மருத்துவமனையில் இருந்தபோது (பழைய படம்)

பாப்பா இப்போ நல்லாயிருக்கா:

தற்போது எப்படி இருக்கிறாள் தன்யஸ்ரீ என்று அவளுடைய தந்தை ஸ்ரீதருக்கு போன் செய்தோம். 

‘’பாப்பா இப்போ ஆறாவது படிச்சிக்கிட்டிருக்கா. ரெண்டு தடவை ஃபிட்ஸ் வந்துச்சு. மத்தபடி நல்லாயிருக்கா. போன விநாயகர் சதுர்த்தி அன்னைக்கு கடைக்கு போயிட்டு இருந்தப்ப திடீர்னு ஃபிட்ஸ் வந்து விழுந்துட்டா. உடனே பக்கத்துல இருக்கிற ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போனோம். பாப்பாவோட கேஸ் ஹிஸ்டரிய கேட்டவங்க, ’தன்யஸ்ரீக்கு ஆப்ரேஷன் பண்ண அதே ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போங்க’ன்னு சொல்லிட்டாங்க. உடனே கிரீம்ஸ் ரோட்ல இருக்குற குழந்தைகள் அப்போலோ ஹாஸ்பிடலுக்கு பாப்பாவைத் தூக்கிட்டு வந்தேன். அங்கே ட்ரீட்மென்ட் கொடுத்ததும் நார்மல் ஆயிட்டா.

இப்போ ஒரு மாசத்துக்கு முன்னாடி தலை வலிக்குதுன்னு சொன்னா. மறுபடியும் ஹாஸ்பிட்டல் போனோம். பாப்பாவோட மண்டை ஓட்டுல ஆபரேஷன் பண்ண டாக்டரும், வழக்கமா செக் பண்ற இன்னொரு டாக்டரும் பாப்பாவை நல்லா செக் பண்ணிப் பார்த்துட்டு ’பயப்படத் தேவையில்லை . கண்ணாடி மட்டும் போட்டா போதும்’னு சொல்லிட்டாங்க. அந்த கண்ணாடியும், ரொம்ப ஹை பவர் கிடையாது. கொஞ்ச நாள் போட்ட தலைவலி சரியாகிவிடும்’னு அவங்க சொன்னதுக்கு அப்புறம்தான் எனக்கு உயிரே வந்துச்சு.

இன்னும் இன்னும் நல்லா இரு தங்கம்:

பாப்பாவுக்கு சின்னதா ஒரு பிரச்னை வந்தாலும் அவளுக்கு ஆபரேஷன் பண்ண ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போயிடுவேன். அங்கதானே அவ்ளோ பெரிய ஆபரேஷன் செஞ்சு பாப்பாவுக்கு மறுஜென்மம் கொடுத்தாங்க. அவளுக்குத் தலைவலி வந்தாலும் சரி, ஃபிட்ஸ் வந்தாலும் சரி, உடனே அந்த ஹாஸ்பிடல் எமர்ஜென்சிக்கு போன் பண்ணிட்டு, பாப்பாவ கூட்டிட்டு போய்டுவேன். அவங்க ரெடியா இருப்பாங்க. ஒண்ணு ரெண்டு தடவை ட்ரீட்மென்ட் கொடுத்தாங்கன்னா அதுல ஒரு தடவை காசு வாங்கிப்பாங்க. இன்னொரு தடவை வேணாம்னு சொல்லிடுவாங்க. அதுலயும் பாப்பாவுக்கு மண்டை ஓட்டுல ஆபரேஷன் பண்ண டாக்டர் தன்யஸ்ரீ மேல ரொம்ப கேரிங்கா இருப்பாரு. மத்தபடி, மருந்து மாத்திரைகளை மட்டும் காசு கொடுத்து வாங்கிட்டு வந்துடுவேன். அந்த ஹாஸ்பிடலே என் பொண்ணுகிட்ட ரொம்ப கருணையா நடந்துக்குது’’ என்றவர், ’’பாப்பா கிட்ட பேசுங்க அக்கா’’ என்று மகள் தன்யஸ்ரீயிடம் போனை கொடுத்தார்.

அந்தத் தந்தையின் குரல், குடிப்பழக்கம் நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிர்க்கு கேடு என்கிற சொற்கள் எவ்வளவு வலி மிகுந்தவை என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது. எந்த் தவறும் செய்யாமல் ஒரு தண்டனையை அனுபவிப்பது எத்தனை துயரமானது என யோசித்தபோது,

’எப்படி இருக்கீங்க ஆன்ட்டி?’ எதிர்ப்புறத்திலிருந்து ஒரு குரல். என் யோசனையை முந்திக்கொண்டு நலம் விசாரிக்கிற அளவுக்கு வளர்ந்துவிட்டிருக்கிறாள் தன்யஸ்ரீ. `நல்லா இருக்கீங்களா, நல்லா படிக்கிறீங்களா' எனக் கேட்டேன். ’நல்லா இருக்கேன்; நல்லா படிக்கிறேன் ஆன்ட்டி’ என்கிறாள்.

இன்னும் இன்னும் நல்லா இரு தங்கம்!

VIKATAN PLAY EXCLUSIVE AUDIO STORIES:

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

கடலூர்: ஓய்வு பெற்ற ஆசிரியையின் கண்கள் தானம்; 4 பேருக்கு பார்வை கிடைத்தது!

கடலூர் மாவட்டம், குண்டு உப்பலவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் லலிதாம்பாள். ஓய்வு பெற்ற தலைமையாசிரியையான இவர், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 18-ம் தேதி உயிரிழந்தார். அதையடுத்து அவரின் மகன்களான செல்வகுமாரும்,... மேலும் பார்க்க

டெலிவரி பாய் டு நீதிபதி... படிப்பால் உயர்ந்த கேரள இளைஞரின் வெற்றிக்கதை!

"நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ" என்ற பாரதியாரின் வரிதான் யாசின் ஷா முகமது பல தடைகளையும் பின்னடைவுகளையும் கடந்து வெற்றி பெறுவதற்கான நெருப்பை அவருள் நிலைத்திருக்கச் செய்துள்ளது. சாதாரண டெலிவரி பாயாக பண... மேலும் பார்க்க

`மாட்டுப் பொங்கலை நம்பித்தான் எங்க பானையில சோறு' - நெட்டி மாலையும்... நாரணமங்கல மக்கள் வாழ்வும்!

தமிழர்களின் பாரம்பர்யத்தை வெளிப்படுத்த பல பண்டிகைகள் இருந்தாலும், தை திருநாளன்று விவசாயிகளுக்குப் பெரிதும் உதவும் கால்நடைகளை போற்றும் விழாவாகப் பார்க்கப்படுவது மாட்டுப் பொங்கல். அந்நாளன்று உழவர் குடிம... மேலும் பார்க்க

``காய்ச்சல்'னு போனோம்; இப்ப உயிருக்குப் போராடுறா!" - 9 வயது மகளின் சிகிச்சைக்கு உதவி கேட்கும் அப்பா!

"யாழினி எப்பவும் சந்தோஷமா, சிரிச்சுட்டே இருக்கிற குழந்தை. நமக்கு ஏதாச்சும் கஷ்டம், சோகம் இருந்தாகூட... ஓடி வந்து கதை கதையா சொல்ற அவளோட மலர்ந்த முகத்தை பார்த்ததுமே நம்ம மனசுக்கும் அவளோட மகிழ்ச்சி தொத்த... மேலும் பார்க்க

அடகு வைக்க செல்லும்போது காணமல் போன கம்மல்... சாதுர்யமாக மீட்டு கொடுத்த ஊராட்சி துணை தலைவர்!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகில் உள்ள சேரம்பாடி, பாலவாடி பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா. தான் அணிந்திருந்த தங்க காதணிகளை குடும்ப சூழ்நிலை காரணமாக அடகு வைப்பதாற்காக சேரம்பாடி கடைவீதிக்கு கொண்டு சென்றிரு... மேலும் பார்க்க