Kotak Mahindra Bank பங்கு விலை அதிகரிக்க இதுதான் காரணமா? | IPS Finance | EPI - 1...
கடலூர்: ஓய்வு பெற்ற ஆசிரியையின் கண்கள் தானம்; 4 பேருக்கு பார்வை கிடைத்தது!
கடலூர் மாவட்டம், குண்டு உப்பலவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் லலிதாம்பாள். ஓய்வு பெற்ற தலைமையாசிரியையான இவர், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 18-ம் தேதி உயிரிழந்தார். அதையடுத்து அவரின் மகன்களான செல்வகுமாரும், சரவணனும் லலிதாம்பாளின் கண்களை தானம் செய்ய முன் வந்தனர். அதற்காக ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை நிர்வாக குழு உறுப்பினரான அய்யனாரை தொடர்பு கொண்டனர். அவரது வழிகாட்டுதலின்படி, லலிதாம்பாளின் கண்களை தானம் செய்ய அரவிந்த் கண் மருத்துவமனை கண் வங்கிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு சென்ற அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவக் குழு, லலிதாம்பாளின் கருவிழிகளை சேகரித்தனர்.
அதன் பிறகு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய இந்தியன் ரெட் கிராஸ் குழுவினர், உறவினர்களுக்கு நன்றி கூறினர். இதுகுறித்து நம்மிடம் பேசிய அய்யனார், ``இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கண் தானம் செய்வதை முக்கிய கடமையாக வைத்திருக்கின்றனர். கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்த குடும்பத்தினர் கண் தானம் செய்து வருகின்றனர். 2019-ம் ஆண்டு உயிரிழந்த லலிதாம்பாளின் சகோதரியின் கண்களும், 2022-ம் ஆண்டு உயிரிழந்த இவரது கணவர் பெருமாளின் கண்களும் ஏற்கெனவே தானம் செய்யப்பட்டிருக்கின்றன. இவரது கண் தானம் மூலம் குறைந்தது, நான்கு பேருக்கு பார்வை கிடைக்க வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்” என்றார்.