சாத்தூர் செவிலியர் பாலியல் புகார்; மாவட்ட எஸ்பி பதிலளிக்க எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவு; பின்னணி என்ன?
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பிரபல தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராக ரகுவீர் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 2023-ல் குழந்தைகள் நல வார்டில் பணியிலிருந்த செவிலியருக்கு, மருத்துவர் ரகுவீர் பாலியல் தொந்தரவு அளித்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக சாத்தூர் நகர் காவல்நிலையத்தில் செவிலியர் அளித்த புகாரின்பேரில் மருத்துவர் ரகுவீர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், சில நாட்களில் ஜாமீனில் வெளிவந்த மருத்துவர் ரகுவீர், "குழந்தைகள் நல வார்டில் பணியிலிருந்த போது சம்பந்தப்பட்ட செவிலியர் சுகாதாரமின்றி குழந்தைகளைக் கையாண்டதற்காக அவரைத் திட்டி, மருத்துவமனையை விட்டு வெளியே போகச் சொன்னேன். இனிமேல் வேலைக்கு வர தேவையில்லை எனவும் எச்சரித்தேன். இதன் தொடர்ச்சியாகச் சிறிது நேரத்தில் திரும்பிவந்த செவிலியர் அவரின் தாய், தந்தை மற்றும் உறவினர்களுடன் மருத்துவமனைக்குள் நுழைந்து பணியிலிருந்த தன்மீது தாக்குதல் நடத்தியதோடு, தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி மருத்துவ உபகரணங்களைச் சேதப்படுத்தினர். ஆகவே அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனப் புகார் அளித்திருந்தார்.
மருத்துவர் ரகுவீர் அளித்த இந்த புகாரின் பேரில் சாத்தூர் நகர் காவல் நிலைய போலீஸார், செவிலியர் மற்றும் அவரின் குடும்பத்தாரின் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் பாதிக்கப்பட்ட செவிலியர், "பாலியல் தொந்தரவுக்கு உள்ளான நான் சம்பந்தப்பட்ட மருத்துவர் ரகுவீர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் மருத்துவர் ரகுவீர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் சாத்தூர் நகர் காவல்நிலைய போலீஸூம் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மருத்துவர் ரகுவீரரின் புகாரில் கூறப்பட்டுள்ளவை அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை.
ஆகவே, சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் என் மீது பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரி, தேசிய எஸ்சி., எஸ்.டி, உரிமைகள் ஆணையத்திற்கு மனு அனுப்பியிருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்ததையடுத்து, செவிலியரின் கடிதம் தொடர்பாக 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணனுக்கு, தேசிய எஸ்.சி.,எஸ்.டி., ஆணைய இயக்குநர் ரவிவர்மன் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY