"விசாரணையை தவறான பாதையில் கொண்டுசெல்ல முயன்ற கிரீஷ்மா" - இருந்தும் நீதி கிடைத்தது எப்படி?
கேரள மாநிலம் பாறசாலை ஷாரோன்ராஜ் கொலை வழக்கில் அவரது காதலி கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்து நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ஆதாரங்களை நிரூபித்த போலீஸாருக்கு பாராட்டு தெரிவித்துள்ளது நீதிமன்றம். போலீஸார் திரட்டிய டிஜிட்டல் ஆதாரங்களும், உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்களின் விஞ்ஞான தகவல்களும், அரசுதரப்பு வழக்கறிஞர் என பலரும் இந்த வழக்கில் முக்கிய பங்காற்றியுள்ளனர். ஷாரோன் ராஜின் மரணத்துக்கு நீதி கிடைத்ததாக மக்கள் கூறுகின்றனர். மகன் ஷாரோன்ராஜிக்கு கஷாயத்தில் விஷம் கலந்துகொடுத்து கொலைசெய்த வழக்கின் தீர்ப்பை கேட்க அவரது அம்மா பிரியா நெய்யாற்றின்கரை கோர்ட்டுக்குச் சென்றிருந்தார். கிரீஷ்மாவுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட கோர்ட் தீர்ப்பு வெளியானதை கேட்டு ஷாரோன்ராஜின் தாய் பிரியா கதறி அழுதார். இதுகுறித்து ஷாரோன்ராஜின் தாய் பிரியா கூறுகையில், "பொன்னு மகனுக்கு நீதி கிடைத்தது. நீதிமான் ஜட்ஜிக்கு ஓராயிரம் நன்றிகள். இந்த தீர்ப்பு திருப்திகரமாக உள்ளது" என தெரிவித்தார். தீர்ப்பு விபரங்கள் குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், "இந்த வழக்கு அபூர்வத்திலும் அபூர்வமானது. ஷாரோன்ராஜை கொலைசெய்ததற்கு கிரீஷ்மாவுக்கு தூக்குத்தண்டனையுடன் 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. வசீகரித்து வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனதற்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. விஷம் கொடுத்ததற்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கிரீஷ்மாவின் தாய்மாமா நிர்மல் குமாருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டதற்காக கேரளா போலீஸுக்கு கோர்ட் பாராட்டு தெரிவித்துள்ளது. இது 100 சதவிகிதம் திருப்தியான தீர்ப்பாக உள்ளது. கிரீஷ்மா 22.08.2022-ல் ஜூஸில் ஹெவி டோஸ் பாராசிட்டமல் கலந்து ஷாரோன் ராஜை கொலைச் செய்ய திட்டமிட்டிருந்தார். ஜூஸ் கசப்பாக இருந்ததாக அதை துப்பியதால் அது தோல்வியடைந்தது. எனவே கிரீஷ்மா திட்டமிட்டு கிரிமினல் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது" என்றார்.
ஷாரோன்ராஜ் கொலை வழக்கின் தொடக்க காலத்தில் இருந்தே விசாரணை அதிகாரியாக இருந்த திருவனந்தபுரம் ரூரல் எஸ்.பி-யாக இருந்த ஷில்பா கூறுகையில், "கிரீஷ்மா வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கோர்ட் தீர்ப்பை வரவேற்கிறோம். இது போலீஸ் விசாரணை மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் உள்ளிட்டோரின் வெற்றியாகும். இது தனி நபரின் வெற்றி என நாம் கூறமுடியாது. இது டீம் ஒர்க் ஆகும். வழக்குப்பதிவு ஆன சமயத்தில் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி அஜித்குமார், ஐ.ஜி பிரகாஷ், டி.ஐ.ஜி நிஷாந்தினி, நான் மற்றும் டி.எஸ்.பி-க்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் வழக்கை தீவிரமான ஃபாலோ அப் மற்றும் அரசு வழக்கறிஞரின் ஃபாலோ அப் ஆகியவையும்தான் காரணம்.
விசாரணையின்போது கிரீஷ்மா சரியான தகவல்களை முதலில் கூறவில்லை. விசாரணையை தவறான பாதையில் கொண்டுசெல்ல முயன்றார். இதனால் தொடக்கத்தில் சில சவால்கள் ஏற்பட்டன. ஆனால் சரியான ஆதாரங்களை சேகரித்து, கிரீஷ்மாவிடம் கேள்வி கேட்டதால் அதற்குமேல் அவரால் உண்மையை மறைக்க முடியவில்லை. கிரீஷ்மாவின் தாய் விடுவிக்கப்பட்டது உள்ளிட்டவைகள் சம்பந்தமாக சட்ட ஆலோசனை செய்து, மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளதா என்பதை ஆராய்வோம்" என்றார்.