குடியரசுத் தலைவரை அவமதித்தாரா சோனியா... எதிர்வினையாற்றிய ராஷ்டிரபதி பவன்; நடந்தத...
"என் கார்மீது மாட்டை மோதவிட்டுக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருக்கலாம்..." - இமான் அண்ணாச்சி பேட்டி
எப்போதும் மக்களைச் சிரிக்கவைத்துக்கொண்டிருக்கும் இமான் அண்ணாச்சியை சீரியஸ் ஆக்கியிருக்கிறது, சமீபத்தில் அவருக்கு நேர்ந்த சம்பவம்.
குடும்பத்துடன் காரில் சென்ற இமான் அண்ணாச்சி, சாலை விபத்திலிருந்து தப்பித்ததாகப் பதைபதைப்போடு தகவல் வெளியிட்டுள்ளார். அரசாங்கம் இதுகுறித்து, நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் கோரிக்கை வைத்த நிலையில், என்ன நடந்தது என இமான் அண்ணாச்சியைத் தொடர்புகொண்டு பேசினேன்...
"நாங்க நாலு அண்ணன் தம்பிங்க. ரெண்டாவது அண்ணனின் மகளுக்குத் திருமணம். பொண்ணு வீட்டிலிருந்து மாப்பிள்ளைக்கு பூ வைக்குற சடங்குக்காக நாங்களும் தம்பி குடும்பமும் சென்னைலருந்து தூத்துக்குடிக்கு இன்னோவா கிரிஸ்டா காரில் பயணித்தோம். எங்களுக்கு முன்னாடி என்னோட அண்ணன் குடும்பம் கார்ல போயிட்டாங்க. தம்பியின் மகளுக்குத் தேர்வு இருந்ததால, முடிச்சுட்டு வந்ததும் நாங்க கொஞ்சம் தாமதமாகக் கிளம்பினோம். திருச்சியைத் தாண்டி மதுரையை நோக்கி 40 கிலோ மீட்டருக்கு முன் போய்க்கிட்டிருக்கும்போது, ஒரு பாலம் வந்தது.
அந்த, பாலத்துக்கு முன்னாடி ரொம்ப இருட்டா இருக்கும். திடீர்ன்னு எங்கிருந்து வந்துச்சோ தெரியல. கருப்பு கலர்ல ஒரு மாடு குறுக்க ஓடிவந்துடுச்சு. மின்னல் வேகத்தில் காரை நோக்கி வந்ததால என்ன பண்றதுன்னே தெரியாம, நிலைகுலைஞ்சு போயிட்டோம். நல்லவேளை, திடீர்ன்னு பிரேக் போட்டுட்டார் டிரைவர் தம்பி. நள்ளிரவு நேரம்... இத்தனைக்கும் ரொம்ப ஸ்லோவாகத்தான் போனோம். டிரைவருக்கு தூக்கம் வந்துடக்கூடாதுன்னு அவர்க்கிட்ட பேச்சு கொடுத்துக்கிட்டு கொஞ்சம் கலகலப்பாகப் பேசிட்டு வந்தேன்.
தூக்கம் வந்தாக்கூட ஓரமா காரை நிறுத்திட்டு தூங்குங்க தம்பின்னு சொல்லி, ரிலாக்ஸாகத்தான் போனோம். அப்படியிருந்தும் இப்படியொரு சம்பவம் எங்க ஈரக்குலையையே நடுங்க வெச்சுடுச்சு. இதுவே, ஸ்பீடா போயிருந்தா எங்களோட நிலைமையே வேற மாதிரி ஆகியிருக்கும். அந்த மாடு குறுக்க ஓடிவந்தது மட்டுமில்ல, இன்னும் சில மாடுகள் வந்து இடித்து காரின் டோர் எல்லாம் டேமேஜ் ஆகிடுச்சு.
இதோட, உயிர் தப்பியதே பெரிசுங்குற அளவுக்கு ஆகிடுச்சு. கிராமத்துல நடந்திருந்தா பரவாயில்ல. தேசிய நெடுஞ்சாலைகளில் மாடுகள் எப்படி வருது? தயவுசெய்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கணும்னு கேட்டுக்குறேன். உயிர் தப்பி வந்த பிறகுதான் நண்பர்கள், ‘இப்போல்லாம், இருட்டான நெடுஞ்சாலைகளில் மாடுகளைக் குறுக்க விட்டு மோதவிடுறமாதிரி கொள்ளை சம்பவங்களும் நடக்குது’ன்னு சொன்னாங்க. நண்பர்களுக்கு அப்படி நடந்ததாகவும் சொல்றாங்க. இதை நான் யாரையும் பயமுறுத்தணும்னு சொல்லக் கிடையாது. இப்படியும் இருக்கலாம்னு விழிப்புணர்வூட்டத்தான் சொல்றேன்.
கடைசிவரைக்கும் நாங்க காரை விட்டு இறங்கவே இல்ல. உடனடியா அந்த இடத்தை விட்டுக் கிளம்பிட்டோம். ஒருவேளை இறங்கியிருந்தா எங்களுக்கு என்ன அசம்பாவிதம் நடந்திருக்குமோன்னு யோசிச்சு பார்க்கும்போதே பதைபதைப்பா இருக்கு. நண்பர்கள், சொன்ன மாதிரி ஏதாவது நடந்திருக்குமோன்னும் தோணுது. இப்போ, நினைச்சாலும் அந்த விபத்து சம்பவம் நடுநடுங்கவைக்குது” என்கிறார் படபடப்பு விலகாத குரலில்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...