காரைக்குடியில் வளர் தமிழ் நூலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்!
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் வளர்தமிழ் நூலகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(ஜன. 21) திறந்துவைத்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ. 12 கோடி செலவில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பழனியப்ப செட்டியாா் நினைவு கலையரங்க வளாகத்தில் 'வளர் தமிழ் நூலகம்' ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதனை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.
பின்னா், பல்கலைக்கழக நிா்வாக அலுவலகக் கட்டடத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவா் உருவச் சிலையையும் திறந்துவைத்தார்.
இதையும் படிக்க | காரைக்குடி பல்கலை.யில் வளா் தமிழ் நூலகம்! ப. சிதம்பரம் கொடை!!
முன்னதாக, சிவகங்கை மாவட்டத்தில் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று காலை திருச்சி விமான நிலையம் வந்தார். அங்கு தொண்டர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பின்னர் திருச்சியிலிருந்து சாலை வழியாக காரைக்குடிக்கு வந்த முதல்வா், அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரத்தின் சொந்த நிதி ரூ.12 கோடியில் கட்டப்பட்ட லட்சுமி வளா் தமிழ் நூலகத்தை திறந்துவைத்தார்.
தொடர்ந்து மாலை 5 மணியளவில் காரைக்குடி பி.எல்.பி. பேலஸ் அரங்கில் கட்சி நிா்வாகிகளைச் சந்தித்து, ஆலோசனை நடத்தவுள்ளாா்.
நாளை(புதன்கிழமை) சிவகங்கையில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரா் வாளுக்குவேலி அம்பலம் சிலையை திறந்துவைக்கிறாா். பின்னா், சிவகங்கை மன்னா் அரசுக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில் முதல்வா் பங்கேற்று, சுமாா் 40 ஆயிரம் பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கவுள்ளாா்.