Kumbh Mela: கும்பமேளாவில் மாலை விற்ற பெண் யூடியூப் பிரபலமான கதை; யார் இந்த வைரல்...
ராகுல் மீது பாஜக புகார்: காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது பாஜக நிர்வாகி அளித்த புகாருக்கு எதிராக தமிழக காங்கிரஸ் கமிட்டி, கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை விடுத்துள்ள அறிக்கை:
இந்திய தேசிய காங்கிரஸுக்கு தலைநகர் தில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திரா பவன் திறப்பு விழாவில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றும்போது, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறியதற்கு பதிலடி கொடுக்கின்ற வகையில், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வை எதிர்ப்பதோடு, இந்திய அரசையும் எதிர்த்துப் போராட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்த பேச்சு இந்திய அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டுகிற வகையில் இருப்பதாகக் கூறி வடகிழக்கு மாகாணமான அசாம் மாநிலம், கவுகாத்தி அருகில் உள்ள காவல் நிலையத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் மீது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இது அப்பட்டமான ஜனநாயக விரோத பாசிச அடக்குமுறை செயலாகும்.
இதை கண்டிக்கிற வகையில் தமிழகம் முழுவதும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில், இன்று (21.01.2025) மாலை 4 மணியளவில் தங்கள் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். சென்னையில், அண்ணாசாலை, தாராப்பூர் டவர் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் கே.வீ. தங்கபாலு, க. திருநாவுக்கரசர், எம். கிருஷ்ணசாமி, நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் இந்நாள் முன்னாள் உறுப்பினர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், நிர்வாகிகள், சென்னை மாநகர மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
மேலும் நாளை(22.01.2025) காலை 11 மணிக்கு ஈரோடு மாநகரில் எனது தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். ராகுல் காந்தி மீது தொடுத்திருக்கும் பாஜக அரசின் அடக்குமுறையை முறியடிக்க கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்.