ஒரு சொல்; ஒரு படம்; ஒரு சம்பவம்... கண்களை கலங்க வைக்கும் சில நிமிடங்கள்! | My Vi...
'தென்கொரிய நாட்டு மாப்பிள்ளை... கரூர் பெண்’ - கரூரில் களை கட்டிய பொங்கல் விழா
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே நடையனூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (28). பொறியியல் பட்டம் பெற்ற இவர், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் போது, தென்கொரிய நாட்டைச் சேர்ந்த மின்ஜூன்கிம் என்ற இளைஞரை வலைத்தளம் மூலம் காதலித்து வந்தார். அதனைத்தொடர்ந்து, இரண்டு தரப்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த மே மாதம் தமிழ்நாட்டிலேயே அந்த தென்கொரிய இளைஞரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு தென் கொரியா சென்ற காதல் ஜோடி, அங்கு மகிழ்ச்சியாக வசித்து வந்தது.
இந்நிலையில், தமிழர்களின் பாரம்பர்யமான பொங்கல் விழாவை காணவும், கொண்டாடவும் மீண்டும் கரூர் மாவட்டம் திரும்பினர். இவர்கள் வசிக்கும் பகுதி கிராமம் என்பதால், பெரும்பாலும் மாட்டுப்பொங்கலை தான் இவர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அதன் அடிப்படையில் நடைபெற்ற மாட்டு பொங்கல் விழாவிற்காக தங்களது வீட்டில் பொங்கல் வைத்து படையல் இட்டு, கால்நடைகளுக்கு சிறப்பு பூஜை செய்து அவற்றிற்கு பொங்கல் கொடுத்து மகிழ்ந்தனர்.
பின்னர், அப்பகுதியில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளை கண்ட தென்கொரிய இளைஞர் மின்சூன் கிம், சமீபத்தில் கற்றுக்கொண்ட தமிழுடன் அப்பகுதி இளைஞருடன் உரையாடி, அவர்களுடன் கலந்து பொங்கல் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றார். அப்போது, நடைபெற்ற கபடி போட்டியிலும், நடன போட்டியிலும் அவர் பங்கேற்று அசத்தினார்.
விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற அனைவரும், அவருக்கு நல்ல ஒத்துழைப்பை அளித்தனர். இதுகுறித்து விஜயலட்சுமி பேசுகையில், ”மேல்நாட்டு கலாசாரத்தில் பிறந்திருந்த போதும், நமது கிராமத்தின் பாரம்பர்யமும், இங்கு கொண்டாடும் தமிழர் பண்டிகைகளும், விளையாட்டுகளும் என் கணவருக்கு மிகவும் பிடித்துப்போனது. இதன் காரணமாகவே பொங்கல் விழாவை கொண்டாடுவதற்காக இந்தியாவிற்கு வந்தோம். பல்வேறு சூழல்களில் எனது கணவர் எனக்காக விட்டுக் கொடுத்து என்னோடு இணைந்து வாழ்க்கை பயணத்தை தொடர்வது மகிழ்ச்சியாக உள்ளது. நமது விழாக்களும், இங்குள்ள மக்களின் அன்பும் தன்னை வெகுவாக கவர்ந்துள்ளதாக என் கணவர் தெரிவித்தார். அதோடு, வருடாவருடம் பொங்கலுக்கு இங்கு வருவதாக தெரிவித்துள்ளார்” என கூறினார்.
அப்போது, மின்சூன் கிம் தனக்கு தெரிந்த தமிழில், ‘தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துககள்’ என்று கூறி, அங்கிருந்தவர்களை ஆச்சர்யபட வைத்தார்.