சைஃப் அலிகான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
நடிகர் சைஃப் அலிகான் சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் வீட்டுக்குள் ஜன. 16 ஆம் தேதி ஊடுருவிய மர்மநபர், அவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வீட்டில் கொள்ளையடிக்கும் முயற்சியில் நடந்ததாக கூறப்படும் இந்த தாக்குதலில் சைஃப் அலிகான் ஆறு முறை கத்தியால் குத்தப்பட்டு, பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சைஃப் அலிகானின் கைகளிலும், கழுத்துப் பகுதியிலும் காயம் ஏற்பட்டிருந்தது. மேலும், முதுகுத் தண்டு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிலையில், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து ஜன. 17 ஆம் தேதி சிறப்பு அறைக்கு மாற்றப்பட்ட சைஃப் அலிகானை மருத்துவர்கள் 4 நாள்களாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில், பலத்த பாதுகாப்புடன் இன்று பிற்பகல் சைஃப் அலிகான் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அவரது வீட்டுக்கு வெளியே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், ஒரு வாரத்துக்கு மேல் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும், வெளிநபர்களை சந்தித்தால் தொற்று பரவும் அபாயம் இருப்பதால், யாரும் அவரைக் காண வரவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : நடிகா் சைஃப் அலிகான் விவகாரம்: மா்ம நபரைக் காட்டிக்கொடுத்த தோள்பை!
குற்றவாளி பிடிபட்டார்
சத்தீஸ்கரில் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரைக் கைது செய்து காவல்துறையினர் முதலில் விசாரித்தனர். விசாரணையில் அவர் நிரபராதி என்று காவல்துறையினர் தெரிவித்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை உண்மையான குற்றவாளி எனக் கூறி ஒருவரைக் கைது செய்தனர்.
முகமது ஷரிஃபுல் இஸ்லாம் ஷேசாத் எனும் அந்த நபர் தனது கிராமத்திற்குத் தப்பிச் செல்ல முயன்றபோது தானே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.