வெண்ணிற உடையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ; 9 பேருக்கு மட்டுமே குண்டம் இறங்க அனுமதி- ஏன் தெரியுமா?
ஹெத்தையம்மனுக்கு விழா
நீலகிரி மாவட்டத்தில் பரவலாக வாழ்ந்து வரும் படுகர் சமுதாய மக்கள் ஹெத்தையம்மன் எனும் மூதாதையரை குல தெய்வமாக வணங்கி வருகின்றனர். ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஹெத்தையம்மனுக்கு விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர். பல கிராமங்களிலும் தற்போது ஹெத்தையம்மன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. ஹெத்தையம்மனின் விருப்பத்திற்குரிய உடையாக கருதப்படும் தூய வெண்ணிற உடை தரித்து வழிபட்டு வருகின்றனர்.
ஊட்டி அருகில் உள்ள காரக்கொரை கிராமத்தில் தற்போது ஹெத்தையம்மன் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். நேற்று நடைபெற்ற குண்டம் இறங்கும் விழாவில் ஹெத்தைக்காரர்கள் எனப்படும் 9 பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்கி பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கினர். இசை, நடனம் என பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபட்டனர்.
ஹெத்தைக்காரர்கள் குறித்து தெரிவித்த படுகர் சமுதாய மக்கள், " சிறப்பு வாய்ந்த கோத்தகிரியின் பேரகணி, ஜெகதளா,கேத்தி உள்ளிட்ட 14 கிராமங்களில் ஹெத்தையம்மன் திருவிழா கொண்டாடப்படுகிறது. ஜெகதளா சுற்றுவட்டாரத்தில் உள்ள 8 கிராமங்களைச் சேர்ந்த 9 பேர் 48 நாட்களாக விரதம் இருப்பார்கள்.
கையில் செங்கோல் ஏந்தியும் புனித குடைகளை பிடித்தவாறும் பல கிராமங்களுக்கு நடந்தே சென்று அருள்வாக்கு கூறுவார்கள். குண்டம் இறங்கும் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடினாலும் ஹெத்தைக்காரர்கள் எனப்படும் 9 பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்க அனுமதிக்கப்படுவது வழக்கம். குண்டம் இறங்கிய பூசாரிகளிடம் மக்கள் அருள்வாக்கு பெற்றுக் கொள்வார்கள் " என்றனர்.