கா்நாடகம்: ஏழை மக்களுக்கு 4.68 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு -சிவ்ராஜ் சிங் சௌஹான்
ரஞ்சி போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா; விலகிய விராட் கோலி!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ரஞ்சி போட்டியில் விளையாடுவதை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், சௌராஷ்டிரத்துக்கு எதிரான போட்டியிலிருந்து விராட் கோலி விலகியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜனவரி 18) அறிவித்தது. அணியை அறிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, கேப்டன் ரோஹித் சர்மாவிடம் ரஞ்சி கோப்பையில் விளையாடுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; ரோஹித் சர்மா கேப்டன்!
ரஞ்சி போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா
ரஞ்சி கோப்பையில் ஜம்மு - காஷ்மீருக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வருகிற ஜனவரி 23 ஆம் தேதி விளையாடவுள்ளது. ஜம்மு - காஷ்மீருக்கு எதிரான இந்தப் போட்டியில் விளையாடவுள்ளதை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உறுதிப்படுத்தினார்.
இது தொடர்பாக பேசிய அவர், கடந்த 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ச்சியாக டெஸ்ட் தொடர்களில் இடம்பெற்று விளையாடி வருகிறேன். அப்போது உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கு நேரம் கிடைப்பது மிகவும் அரிது. சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக விளையாடும்போது, உங்களை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள சிறிது ஓய்வு தேவைப்படும். யாரும் உள்ளூர் போட்டிகளை விளையாடக் கூடாது என நினைப்பதில்லை. அதனைக் குறைத்து மதிப்பிடுவதும் இல்லை என்றார்.
இதையும் படிக்க:"அருமையான அணி...” பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை பிசிசிஐ-க்கு பாராட்டு!
விராட் கோலி விளையாடவில்லை
ரஞ்சி கோப்பையில் சௌராஷ்டிரத்துக்கு எதிரான போட்டிக்கான தில்லி அணியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியின் பெயர் இடம்பெற்ற நிலையில், தற்போது அந்தப் போட்டியிலிருந்து விராட் கோலி விலகியுள்ளார்.
இது தொடர்பாக தில்லி கிரிக்கெட் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியின்போது, விராட் கோலிக்கு கழுத்துப் பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர் ஓய்வில் இருக்க அறிவுத்தப்பட்டுள்ளார். அதனால், சௌராஷ்டிரத்துக்கு எதிரான போட்டியில் தில்லி அணியில் அவர் விளையாடமாட்டார். தில்லி அணி, ரயில்வேஸ் அணிக்கு எதிராக அதன் கடைசி லீக் போட்டியில் விளையாடவுள்ளது. அந்தப் போட்டியிலும் விராட் கோலி விளையாடுவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பும்ரா விளையாட மாட்டார்: அஜித் அகர்கர்
விராட் கோலி கடைசியாக கடந்த கடந்த 2012 ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி போட்டியில் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.